5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Arvind Kejriwal: “கடவுள் இருக்கான்” கொட்டும் மழையில் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் உருக்கம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு கொட்டும் மழையிலும் அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Arvind Kejriwal: “கடவுள் இருக்கான்” கொட்டும் மழையில் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் உருக்கம்!
அரவிந்த் கெஜ்ரிவால் (Photo Credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Sep 2024 20:10 PM

சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு கொட்டும் மழையிலும் அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதன்பின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”இன்று நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். நான் என் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனால் கடவுள் என்னை ஒவ்வொரு அடியிலும் ஆதரித்தார். இந்த முறையும் கடவுள் என்னை ஆதரித்தார். ஏனென்றால் நான் நேர்மையாக இருந்தேன். எனது தைரியம் 100 மடங்கு அதிகரித்துள்ளது.

சிறைச் சுவார்கள் எனது தைரியத்தை பலவீனப்படுத்த முடியாது. நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். எனக்கு சரியான பாதையை தொடர்ந்து காட்ட இறைவனை பிரார்த்தனை செய்வேன். நாட்டைப் பலவீனப்படுத்தவும், நாட்டைப் பிளவுபடுத்தவும் முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று கொட்டு மழையில் உருக்கமாக பேசினார்.

Also Read: லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து.. 8 பேர் உயிரிழப்பு.. சித்தூரில் அதிர்ச்சி!

ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்:

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதேவேளை டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மீண்டும் அவகாசம் முடிந்து சிறைக்கு சென்ற கெஜ்ரிவால், பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார். இதில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கு இடையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதமன்ற மறுத்ததோடு, ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

Also Read: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அதிர்ச்சி கொடுத்த மம்தா.. மேற்கு வங்க அரசியலில் ட்விஸ்ட்!

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வழக்குகள் பட்டியல் தொடர்பாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். மேலும், பிணையத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கை பற்றி பகிரங்கமாக எந்த கருத்தும் பேசக் கூடாது என்றும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Latest News