5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கொட்டும் மழை.. 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் வேலூரில் இடி மின்னலுடன் கூடியம் மிதமான மழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

School Leave: கொட்டும் மழை.. 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 16 Oct 2024 07:29 AM

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவில் அதே பகுதியில் நேற்று, இரவு 11.30 மணி நிலவரப்படி மையம் கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 530 கி.மீ. நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை சென்னை அருகே புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் வேலூரில் இடி மின்னலுடன் கூடியம் மிதமான மழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதன் காரணமாக, இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக வட தமிழகத்தில் கனமழை பதிவாகி வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், சேலம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கடலூர், கள்ளக்குறிச்சி,  சேலம், தருமபுரி  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை என்ன?

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து ஆகியவை இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட கிழக்கு பருவ மழை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பதிவாகி வருகிறது.

மேலும் படிக்க: வெளுக்கும் கனமழை.. சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

நாளை இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக கடலோர பகுதிகளில், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest News