Exclusive : மழைக் காலங்களில் உஷார்.. வாகனங்களை பராமரிக்க நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
Vehicle Maintenance : மழைக்காலம் வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் வாகனங்கள் பழுதாகி விடும். அடிக்கடி வேலை வைத்துக் கொண்டே இருக்கும். மழைக்காலத்தில் சில வழிமுறைகளை பின்பற்றினால் வாகனங்கள் பழுதாவதில் இருந்து காப்பாற்றலாம் என்கிறார் நிபுணர்.
மழைக்காலத்தில் வாகனங்கள் பழுதாகி சிரமத்தை ஏற்படுத்தும். சென்னை போன்ற பெரு நகரங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. வெள்ளங்களில் சிக்கி பழுதாகி நிற்கும் வாகனங்கள், விபத்தில் சிக்கி உரு குலைந்து நிற்கும் வாகனங்கள் என இந்தியாவின் எந்த மூலையிலும் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும், பாதிப்படைந்த இடத்திற்கு சென்று அதை மீட்டு, சரி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறார் டோமேன் நிறுவனத்தின் நிறுவனர் சிலம்பரசன் ராமகிருஷ்ணன்.
15 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் பெற்ற இவர் தற்பொழுது தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் மூலம் டோமேன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பாதிக்கப்பட்ட வாகனங்களை மீட்டு வருகிறார். மழைக்காலத்தில் நமது வாகனங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற எளிய குறிப்புகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மழைக் காலங்களுக்கான டிரைவிங் டிப்ஸ்:
மழைக்காலத்தில் வாகனங்கள் சில சவால்களை ஏற்படுத்தும். உங்கள் பைக் அல்லது காரை சிறந்த நிலையில் வைத்திருக்க சில எளிய குறிப்புகளை பின்பற்றினாலே மழைக்காலத்தில் சுமூகமான பயணத்தை மேற்கொள்ளலாம். வாகனம் ஓட்டுபவர்கள் மழைக்காலங்களில் முதலில் வேகத்தை குறைக்க வேண்டும். வேகத்தை குறைப்பது மூலமாக ஹைட்ரோ பிளானிங்கைத் (Hydroplaning) தவிர்க்க உதவுகிறது.
ஹைட்ரோ பிளானிங் என்றால் சாலையில் இருக்கும் தண்ணீரின் காரணமாக வாகனங்களின் டயர்கள் இழுவை மற்றும் கட்டுப்பாட்டை இழக்கும் போது நிகழக்கூடிய ஒரு ஆபத்தான சூழலாகும். மேலும் வேகம் குறைவாக செல்வதால் வலுக்கும் தன்மை கொண்ட இடங்களில் நம்மை கட்டுப்பாட்டுடன் இயங்க உதவுகிறது.
சாலையில் பயணிக்கும் போது முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து தூரமாக பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பாக பிரேக்கை இயக்க முடியும். இதன் மூலம் திடீரென்று பிரேக் போடுவது தவிர்க்கப்பட்டு மழை காலங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மழைக்காலங்களில் எப்பொழுதும் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகளை பயன்படுத்தவும். பயணங்களின் போது சறுக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்குள் டயர் அழுத்தம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Also Read: காரை அடிக்கடி கழுவுவீர்களா? இதை தெரிந்து கொள்ள வேண்டும்!
காரில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்றுவதற்கு டி ஃபாஸ்டர் அல்லது ஏசியை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கண்ணாடியும் தெளிவாக இருக்கும். மழைக்காலங்களில் திடீர் பிரேக்குகள் சறுக்கல்களை ஏற்படுத்தும். எனவே பிரேக்குகளை சீராக பயன்படுத்துங்கள். சாலையை கடக்கும் போது வேகத்தை குறைத்து எச்சரிகையாக செயல்பட வேண்டும். வானிலையை கண்காணித்து தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளை தவிர்க்கவும் .
இருசக்கர வாகனங்களின் பராமரிப்பு முறை:
செயினில் துருப்பிடிப்பதை தடுக்க அதை தொடர்ந்து சுத்தம் செய்து உயவூட்ட (Lubricants) வேண்டும். ஈரமான வழுக்கும் தன்மை கொண்ட சாலைகளில் பிடிமானம் சரியாக இருப்பதற்கு போதுமான திரட் டெப்த் (Tread Depth) இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான முறையில் பிரேக்குகள் இயங்குவதற்கு பிரேக் பேடுகள் (Brake Pads) மற்றும் டிரம் பிரேக்குகளை (Drum Brakes) சரி பார்த்து பராமரிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் ஹெட்லைட், டெய்ல் லைட், இண்டிகேட்டர் ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மற்ற வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரியும்படி விளக்குகளை பயன்படுத்த இது உதவுகிறது. இருக்கைகளை உலர்வாகவும் வசதியாகவும் வைத்திருக்க நீர் புகாத இருக்கை அட்டையை (Waterproof Seat Cover) பயன்படுத்தவும்.
தளர்வாக அல்லது வெளியில் தெரியும் வயர்களை சரி பார்த்துக் கொள்ளவும். சார்ட் சர்க்யூட்டுகளை தவிர்க்க சரியான இன்சுலேசனை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும். ஆழமான நீரில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் புகைப்போக்கி தொகுதி (Exhaust system) மற்றும் இன்ஜின் பாகங்கள் சேதமாகும். வாகனத்தின் உலோக பாகங்களில் ஏற்படும் அரிப்பை தடுப்பதற்கு துரு எதிர்ப்பு ஸ்ப்ரேயை (Anti-Rust Spray) பயன்படுத்துங்கள்.
நான்கு சக்கர வாகனங்களின் பராமரிப்பு முறை:
மழைக்காலத்தில் முகப்பு கண்ணாடி தெளிவாக இருப்பது அவசியம். தெளிவான நிலையை பெறுவதற்கு தேய்ந்து போன வைப்பர் பிளேடுகளை மாற்ற வேண்டும். டயர்களில் தேய்மானம் உள்ளதா என்பதை பரிசோதித்து அவற்றில் போதுமான காற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரேக் ஆயிலின் அளவை சரிபார்த்து பிரேக்குகள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், மூடுபனி விளக்குகளை (Fog Light) பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பேட்டரி டெர்மினல்கள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், அரிப்பு இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏர் கண்டிஷனர் சிஸ்டம் மற்றும் டீ ஃபாகர் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Also Read: ஏசி போட்டு காரை ஓட்டினால் மைலேஜ் குறையுமா? உண்மை என்ன?
துரு பிடிக்காமல் இருப்பதற்கு துருப்பிடிக்காத பூச்சுகளை அடிப்பகுதி மற்றும் பிற பாதிக்கக்கூடிய பகுதிகளில் பயன்படுத்துங்கள். கார்களில் கசிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சுற்றி உள்ள ரப்பர் சீல்களை பரிசோதிக்க வேண்டும். காரின் உட்புறத்தை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க நீர் புகாத தரை விரிப்புகளை பயன்படுத்தவும். அவசரநிலை பயன்பாடுகளுக்கான விளக்கு, ஜம்பர் கேபிள்கள், முதலுதவி பெட்டி மற்றும் அத்தியாவசிய கருவிகளை எப்பொழுதும் காரில் வைத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.