போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்.. மூத்தக் குடிமக்கள் ரூ.20,500 மாத வருமானம் பெறுவது எப்படி?

Post Office Scheme: இந்திய அஞ்சலகம் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மகளிர், மூத்தக் குடிமக்கள், பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டங்கள் பிரத்யேகமாக உள்ளன.

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்.. மூத்தக் குடிமக்கள் ரூ.20,500 மாத வருமானம் பெறுவது எப்படி?

மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்

Updated On: 

21 Nov 2024 17:08 PM

அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமானது பல சேமிப்புக் கருவிகளை உள்ளடக்கியது. நம்பகமான மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வருமானங்களை வழங்குகிறது. இவை நிலையான அல்லது கூட்டு வட்டியை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் எந்தவொரு பகுதியில் இருந்தும் முதலீகளை தொடங்கலாம். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்திய அஞ்சலக திட்டங்கள் பல, இந்தியர் அல்லாத நபர்களுக்கு பொருந்தாது. மேலும், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வரி சலுகைகள் கிடைக்கின்றன.

நாம் தற்போது மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.

மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்றால் என்ன?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கானது. இந்தத் திட்டம் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் வரிச் சேமிப்புப் பலன்களுடன் வழக்கமான வருமானத்தை வழங்குகிறது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாகும்.

திட்டத்தின் சுருக்கமான தகவல்கள்

  1. காலம் – 5 ஆண்டுகள்
  2. வட்டி – 8.2 சதவீதம்
  3. குறைந்தப்பட்ச முதலீடு – ரூ.1,000
  4. அதிகப்பட்ச மூதலீடு – ரூ.30 லட்சம்
  5. வரி பலன்கள் – ரூ.1.50 லட்சம் வரை 80 சி வரி விலக்கு
  6. முன்கூட்டியே கணக்கை மூடும் வசதி- உண்டு
  7. நாமினி- உண்டு

எப்படி பணம் செலுத்துவது?

ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையாக இருக்கும்போது பணத்தை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் போது, ​​காசோலை மூலம் பணம் செலுத்த வேண்டும்.

முதிர்வு காலம்

மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும், முதலீட்டாளர் முதிர்வு காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். முதிர்வு நீட்டிப்பு விண்ணப்பத்தை ஒரு ஆண்டுக்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: அதிகளவு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஈர்த்த மாநிலம்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா?

எத்தனை கணக்குகள் வைத்திருக்கலாம்?

ஒரு முதலீட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட எஸ்.சி.எஸ்.எஸ் கணக்குகளைத் திறக்கலாம். மேலும், தனது மனைவியுடன் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம்.
இந்தக், கூட்டுக் கணக்குகளை மனைவியுடன் மட்டுமே திறக்க முடியும். இந்தக் கூட்டுக் கணக்கில் முதலில் டெபாசிட் செய்யும் முதலீட்டாளரே ஆரம்ப வைப்பாளர் ஆக கருதப்படுவார்.

கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற முடியுமா?

இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.30 லட்சம். டெபாசிட்களை ரூ.1,000 மடங்குகளில் செய்யலாம். மேலும், ஒரு எஸ்.சி.எஸ்.எஸ் கணக்கை ஒரு தபால் அலுவலகத்திலிருந்து ஒரு வங்கிக்கு மாற்றலாம்.

கணக்கை முன்கூட்டியே மூட என்ன விதிகள்?

எஸ்.சி.எஸ்.எஸ் முதலீடு ஓராண்டுக்கு முன்னர் மூடப்பட்டால், செலுத்தப்பட்ட வட்டி அசல் தொகையில் இருந்து கழிக்கப்படும். அதுவே, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டடால், அசல் தொகையில் 1% கழிக்கப்படும். அதாவது, அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டால் 1.50 சதவீதம் வரை அசல் தொகையில் இருந்து கழிக்கப்படும்.

திட்டத்தில் முதலீடு செய்ய தகுதிகள் என்ன?

  • 60 வயதை கடந்திருக்க வேண்டும்.
  • 55-60 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள்
  • 50 வயதுக்கு மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள்
  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் முதலீடு செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

திட்டத்தின் பலன்கள்

இது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டுத் திட்டமாகும்.
இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலும் இந்தக் கணக்கை திறக்க முடியும்.
இந்திய வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது.

ரூ.20,500 வருமானம் பெறும் வழிமுறை

எஸ்.சி.எஸ்.எஸ். எனப்படும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும். இது அரசாங்க திட்டங்களிலேயே மிக உயர்ந்த வட்டி விகிதமாக உள்ளது.
மேலும், இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதன்படி, ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் வட்டியாக மட்டும் கிடைக்கும்.

இதை 12 மாதங்களை கொண்டு வகுத்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,500 வருவாய் ஆக கிடைக்கும். மேலும், இந்தப் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

போஸ்ட் ஆபீஸில் கணக்கை தொடங்குவது எப்படி?

மூத்தக் குடிமக்கள் விண்ணப்பப் படிவத்தை தபால் அலுவலகக் கிளையிலோ அல்லது இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ வாங்கலாம்.

படிவத்தின் மேல் இடது மூலையில் அஞ்சல் அலுவலகக் கிளையின் பெயரை எழுதவும்.
நீங்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், கணக்கு எண்ணை எழுதவும்.
முகவரி எழுத வேண்டிய இடத்தில் முகவரியை தெரிவிக்கவும். முகவரி மற்றும் பெயரை மிகக் கவனமாக எழுத வேண்டும்.
இதையடுத்து, புகைப்படம் ஒட்ட வேண்டிய இடத்தில் புகைப்படத்தை ஒட்டவும்.
நாமினி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை முறையாக எழுதி அஞ்சலகத்தில் படிவத்தை சமர்பிக்கவும்.
எஸ்.சி.எஸ்.எஸ் கணக்கு திறக்கப்படும்.

வங்கியில் எஸ்.சி.எஸ்.எஸ் கணக்கு

வங்கியில் எஸ்.சி.எஸ்.எஸ் கணக்கை திறக்க இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவை.
பான், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
முகவரி சான்றுக்கு ஆதார் கார்டு மற்றும் டெலிபோன் ரசீதை சமர்பிக்கலாம்.
வயது சான்றுக்கு பிறந்த சான்று, வாக்காளர் அடையாள அட்டை, மூத்தக் குடிமக்கள் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆன்லைனில் எஸ்.சி.எஸ்.எஸ் கணக்கை திறக்க முடியுமா?

மூத்தக் குடிமக்கள் சேமிப்பு கணக்கை தற்போது ஆன்லைனில் திறக்க சேவை இல்லை. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளோ அல்லது தபால் நிலையங்களோ ஆன்லைனில் கணக்கை திறக்கலாம். எனினும், ஆஃப்லைனில் கணக்கை எளிதாக தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மாதம் ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?