PAN Card: ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருக்கலாமா? விதிகள் சொல்வது என்ன?
PAN Card: பான் கார்டு தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. நாட்டில் ஒரு நபருக்கு ஒரே ஒரு பான் கார்டு வைத்திருக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அது குற்றம் என வருமானவரித்துறை அறிவித்திருக்கிறது. விதிகளின்படி ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதை வேறு ஒருவருக்கு மாற்றவும் முடியாது.
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பான் கார்டு போலவே ஆதார் அட்டையும் முக்கியமானது. ஆதார் அட்டை நம்மை நாட்டின் குடிமகனாக அடையாளப்படுத்துகிறது. பான் கார்டு நமது நிதி பரிவர்த்தனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சட்டத்திற்கு இணங்குவதை உறுதிப்படுத்த அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறது. எனவே பான் கார்டு என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் முக்கியமான ஆவணம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருக்கலாமா? அப்படி வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது என்றால் அவர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதம் எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பான் கார்டு என்றால் என்ன?
நிரந்தர கணக்கு எண் (PAN – PERMANENT ACCOUNT NUMBER) அட்டை வருமானவரித்துறையால் வழங்கப்படுகிறது. துறையின் விதிகளின்படி ஒருவருக்கு ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க அதற்கு மேல் இருந்தால் அது சட்டத்திற்கு விரோதமானது. தனி நபர்கள், வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை பான் கார்டு வழங்குகிறது.
இது 10 தனித்துவமான இலக்கங்களை கொண்டுள்ளது. இது நிதி பரிவர்த்தனைகளுக்காக அந்த நபருக்கு வழங்கப்பட்ட அடையாள ஆவணமாகும். வங்கி கணக்கு தொடங்குவதற்கும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பல்வேறு முதலீடுகள் செய்வதற்கும் பான் கார்டு அவசியமாக இருக்கிறது. எளிமையாக சொன்னால் நாம் செய்யும் ஒவ்வொரு நிதி நடவடிக்கையும் பான் கார்டு கட்டாய தேவை.
பான் கார்டில் நபரின் பெயர், அவரது புகைப்படம்,பிறந்த தேதி மற்றும் பான் எண் இருக்கும். அந்த எண் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக ஒதுக்கப்பட்டிருக்கும். நிதி பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண்ணுடன் பயன்படுகிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள் அனைவருக்கும் இது மிகவும் அவசியம். ரியல் எஸ்டேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது இது அவசியம்.
ஒன்றுக்கு மேல் வைத்திருந்தால் என்ன தண்டனை?
- பான் கார்டு தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. நாட்டில் ஒரு நபருக்கு ஒரே ஒரு பான் கார்டு வைத்திருக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அது குற்றம் என வருமானவரித்துறை அறிவித்திருக்கிறது. விதிகளின்படி ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதை வேறு ஒருவருக்கு மாற்றவும் முடியாது.
- ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகள் வைத்திருப்பவருக்கு அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகள் வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தை மீறும் செயலாகும். மேலும் இது வருமான வரி பதிவுகளை குழப்பமடைய செய்கிறது. ஒரு தனிநபரின் வரி செலுத்துதல்கள் மற்றும் தாக்கல்களை கண்காணிப்பதை தடுக்கிறது.
- ஒரு நபரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பது கண்டறியப்பட்டால் ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்த நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272B இன் கீழ் எடுக்கப்படுகின்றன.
- அனைவருக்கும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
எந்த பான் கார்டை பயன்படுத்துவது?
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் அதில் முதலில் பதிவு செய்து பெறப்பட்ட பான் கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற பான் கார்டுகளை பயன்படுத்தினால் இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி ₹10,000 அபராதமும் ஆறு மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.
கூடுதல் பான் கார்டுகளை எப்படி ரத்து செய்வது?
- முதல் பான் கார்டு பதிவு செய்த மாவட்டமும் அடுத்த பான் கார்டு பதிவு செய்த மாவட்டமும் ஒரே மாவட்டமாக இருந்தால் இணையத்தின் மூலமாக கூடுதல் பான் கார்டு ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம்.
- ஆனால் முதல் பான் கார்டு ஒரு மாவட்டத்திலும் மற்றொரு பான் கார்டு வேறொரு மாவட்டத்திலும் பதிவு செய்திருந்தால் அதை இணையம் மூலமாக ஒப்படைக்க முடியாது. இரண்டாவதாக பதிவு செய்த பான் கார்டு எந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதோ அந்த மாவட்டத்தில் உள்ள வருமான வரி துறைக்கு பான் கார்டு ரத்து செய்யக்கோரி கடிதம் எழுத வேண்டும். அதன் பிறகு உங்களில் கூடுதல் பான் கார்டு ரத்து செய்யப்படும்.
- எக்காரணத்தைக் கொண்டும் உங்களின் முதல் பான் கார்டை ரத்து செய்யக்கூடாது. அதற்குப் பின்னால் எடுத்த பான் கார்டுகளை மட்டுமே ரத்து செய்ய வேண்டும். முதல் பான் கார்டில் பிழைகள் ஏதும் இருந்தால் அதை திருத்திக் கொண்டு அந்த பான் கார்டை தான் பயன்படுத்த வேண்டும்.