வங்கி வரிசையில் வா.. அடிச்சி நகர்த்தும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள்.. இவ்ளோ வட்டியா?
Post office vs Bank savings schemes: நாட்டின் பிரதான வங்கிகளை காட்டிலும், அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். மேலும், இந்தத் திட்டத்தில் பூஜ்ய ரிஸ்க் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலக திட்டங்கள் கவர்ச்சிகரமான வட்டியை வழங்குகின்றன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் பாதுகாப்பான முதலீடுகளில் தங்களின் பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். இந்த எண்ணம் அவர்களை சந்தை தொடர்பான முதலீட்டு கருவிகளில் இருந்து விலக்கி வைக்கிறது. தற்போது நாம் இந்த கட்டுரையில் வங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக வங்கிகள் 24/7 வாடிக்கையாளர் ஆதரவு, பிரத்யேக ஹெல்ப்லைன்கள் மற்றும் பயனர்களின் சந்தேகங்களுக்கு விரைவான தீர்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இது அவற்றின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. மறுபுறம், பல தசாப்தங்களாக இந்தியாவில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. இங்கு முதலீடு செய்ய பலதரப்பட்ட மக்களும் விரும்புகின்றனர். குறிப்பாக மூத்தக் குடிமக்களின் பெருமளவு சேமிப்பு இங்கு கொட்டி கிடக்கிறது.
இந்த அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு, ஆர்.டி., எஃப்.டி, மகளிர் எஃப்.டி திட்டங்கள், பெண் குழந்தைகள் சிறுசேமிப்பு திட்டங்கள், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் உள்ளன.
வங்கிகளை பொறுத்தமட்டில் சிறுசேமிப்பு திட்டங்கள், எஃப்.டி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும் சில குறிப்பிட்ட திட்டங்கள் கிடைக்கின்றன. தற்போது வங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை அறிந்துக்கொள்வோம்.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய செபி.. பின்வாங்கிய சி2சி IPO.. பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
அதற்கு முன்னதாக, அஞ்சலகங்களில் கிடைக்கும் திட்டம், அவற்றுக்கான வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
- பி.பி.எஃப் – 7.1 சதவீதம்
- அஞ்சலக சேமிப்பு திட்டம்- 4 சதவீதம்
- போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி – 6.7 சதவீதம்
- போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்- 1 ஆண்டுக்கு 6.9 சதவீதம், 2 ஆண்டுக்கு 7 சதவீதம், 3 ஆண்டுக்கு 7.1 சதவீதம் மற்றும் 5 ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்குகிறது.
- போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம்- 7.4 சதவீதம்
- சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் – 8.2 சதவீதம்
- கிஷான் விகாஸ் பத்ரா- 7.5 சதவீதம்
- தேசிய சேமிப்பு சான்றிதழ் – 7.7 சதவீதம்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா – 8.2 சதவீதம்
போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் நன்மைகள்
- எளிதான ஆவணங்கள்: அஞ்சலக திட்டங்களில் சேமிக்க எளிதாக ஆவணங்கள் போதும். மேலும், பெரும்பாலான அஞ்சலக திட்டங்கள் இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும். என்.ஆர்.ஐ குடிமக்களுக்கு பொருந்தாது.
- இடர் குறைவு, கூட்டு வட்டி: போஸ்ட் ஆபீஸ் திட்டங்களிலில் பல வருமான வரி சேமிக்க உதவுகின்றன. அதே நேரத்தில் மத்திய அரசின் ஆதரவு இருப்பதால், இந்தத் திட்டங்கள் ஜீரோ ஆபத்து முதலீடு பட்டியலில் வருகின்றன.
- பலத்தரப்பட்ட மக்களின் விருப்பம்: அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் வெவ்வேறு முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
அஞ்சலகத்தில் மாணவர்களுக்கு பிரத்யேக திட்டங்கள் உள்ளனவா?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைத் தவிர அனைத்து திட்டங்களையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறலாம். சுகன்யா சம்ரித்தி யோஜ்னா என்பது பெண் குழந்தைகளுக்கான திட்டமாகும். இதில், ஆண் குழந்தைகள் விரும்பும் திட்டமாக பி.எஃப் உள்ளது.
இதையும் படிங்க: Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் என்பது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். இது உத்தரவாதமான வட்டி விகிதத்துடன் ஒரு நிலையான காலத்திற்குள் மொத்த தொகையை முதலீடு செய்ய உங்களை அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் வங்கிகளின் காலம், முதலீட்டு வரம்புக்கு ஏற்ப மாறுபடும். தற்போது, நாட்டின் முன்னணி வங்கிகளின் ஓராண்டி வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
வங்கி ஓராண்டி எஃப்.டி வட்டி விகிதம்
- எஸ்.பி.ஐ – 6.5
- ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 6
- ஹெச்.டி.எஃப்.சி – 6.6
- பி.என்.பி – 7.55
வங்கி எஃப்.டி-ஐ விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக திட்டங்கள்
- பி.பி.எஃப்
- போஸ்ட் ஆபீஸ் எஃப்.டி
- மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா
- தேசிய சேமிப்பு சான்றிதழ்
பி.பி.எஃப்
பி.பி.எஃப் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ஆண்டுக்கு ரூ.1,50 லட்சம் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் எஃப்.டி
அஞ்சலகங்களிலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தில் 1 ஆண்டுக்கு 6.9 சதவீதம், 2 ஆண்டுக்கு 7 சதவீதம், 3 ஆண்டுக்கு 7.1 சதவீதம் மற்றும் 5 ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1,000 முதல் அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் அஞ்சலகங்களில் அதிக வட்டி வழங்கும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
பிரதமர் நரேந்திர மோடி 2014ல் முதன் முறையாக பொறுப்பு வந்த போது இந்தத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டமும் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி வழங்கும் பட்டியலில் உள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க முடியும். ஒரு பெற்றோர் இரு பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதிகப்பட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை. திட்டத்தில் 7.7 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
அஞ்சலகங்களின் சிறுசேமிப்பு வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாத காலாண்டுக்கும் ஓர் முறை திருத்தி அமைக்கப்படும். அதேபோல் வங்கி எஃப்.டி உள்ளிட்ட சிறுசேமிப்பு வட்டி விகிதங்களும் குறிப்பிட்ட காலக்கெடுக்கு ஏற்ப, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திருத்தி அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: முதலீடு என்பது தனிநபரின் விருப்பம், ரிஸ்க்குக்கு உட்பட்டது. முதலீடு தொடர்பான எந்தவொரு லாபத்துக்கோ, நஷ்டத்துக்கோ டி.வி 9 தமிழ் பொறுப்பு ஏற்காது.