5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 Highlights : தங்கம் முதல் வருமான வரி வரை.. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் தகவல்கள்

Union Budget 2024 Full Speech and Highlights: நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், இளைஞர், பெண்கள், விவசாயிகள், எழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

Budget 2024 Highlights : தங்கம் முதல் வருமான வரி வரை.. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் தகவல்கள்
மத்திய பட்ஜெட் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jul 2024 15:52 PM

பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே அரசின் கொள்கை இலக்காக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2024 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

விவசாயம்:

  • அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்.
  • 32 தோட்டக்கலையில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயர்கள் அறிமுகம்.
  • தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயத்துறைக்கு ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.1.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.

பீகார், ஆந்திரா:

  • பீகார் மாநிலத்திற்கு 3 அதிகவேக சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பீகாரில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், பாசனத்திற்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
  • பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
  • ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

உள்கட்டமைப்பு வசதி:

  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
  • 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 14 நகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்கள் உருவாக்கப்படும்.
  • பிரமரின் சூர்யா கர் முஃபத் பிஜிலி யோஜனா திட்டத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தப்படும்.
  • ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரேசன் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  • நாட்டில் உள்ள 100 பெரு நகரங்களில் குடிநீர் மற்றும கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை – விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு:

  • 2024-25ஆம் நிதியாண்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இளைஞர்கள் சுயதொழில் முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.10 லட்சமாக இருந்த நிலையில், உயர்த்தப்பட்டுள்ளது.
  • வேலை தேடும் 1 கோடி இளைஞர்களுக்கு நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.
  • பிரதம மந்திரி இன்டன்ஷிப் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தில் மாதந்தோறும் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் ஐடிஐக்கள் உருவாக்கப்படும்.
  • 4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
  • வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • முதல்முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.15,000 வரை செலுத்தப்படும். ஒரு மாதம் சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாதம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
  • உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில 10 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும். கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.
  • EPFOயில் பதிவு செய்யப்பட்டோருக்கு ரூ.15,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும்.

பெண்கள்:

  • பெண்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் பெண்கள் தொடர்பான திட்டங்கள் மேலும் வலுப்பெறும்.
  • தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கம் விடுதிகள் அமைக்கப்படும். இல்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.
  • சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படும்.

வரிகள் சார்ந்த அறிவிப்புகள்:

  • புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருத்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  • தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான சுங்க வரியை 12 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதம் ஆகவும் குறைக்கப்படுகிறது.
  • எஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலுமாக அகற்றப்படும்.
  • மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படுகிறது.
  • செல்போன், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்புகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் விலக்கு
  • சூரிய ஒளி மின்சாரத்துக்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

வருமான வரி:

  • 2024-25ஆம் நிதியாண்டில் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை.
  • புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையான கழிவு தொகையானது 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
  • புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.
  • புதிய வருமான வரி முறையில் ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி செலுத்த தேவையில்லை.
  • புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 10 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20 சதவீதமும், ரூ. 15 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.

Also Read: மத்திய பட்ஜெட் 2024 PDF.. டவுன்லோட் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Latest News