மீண்டு(ம்) எழுந்த அதானி பங்குகள்.. 10% வரை உயர்வு: காரணம் என்ன?
Adani Group shares jump: அதானி நிறுவன பங்குகள் இன்று (நவ. 27, 2024) மீண்டும் ஏற்றம் கண்டன. அதாவது, அதானி க்ரீன் எனர்ஜியின் அறிக்கைக்குப் பிறகு புதன்கிழமை அதானி குழுமத்தின் பங்குகள் 8% க்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளன.
அதானி பங்குகள் 10 சதவீதம் வரை உயர்வு: அதானி க்ரீன் எனர்ஜியின் அறிக்கைக்குப் பிறகு புதன்கிழமை (நவ.27, 2024) அதானி குழுமத்தின் பங்குகள் 10% க்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளன. முன்னதாக வெளியான நிறுவன அறிக்கையில், “கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் சிவில் புகார் குறித்தும் அறிக்கை தெளிவுப்படுத்தி இருந்தது. அதாவது, அதானி கிரீன் எனர்ஜியின் செய்திக்குறிப்பில், அதன் இயக்குநர்கள் மீதான லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீதான எஃப்.சி.பி.ஏ மீறல்களைப் பரிந்துரைக்கும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை
மேலும் அந்த அறிக்கையில், “எங்களின் சில இயக்குநர்கள், குறிப்பாக கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது எஃப்.சி.பி.ஏ விதிமீறல்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறும் ஊடகக் கட்டுரைகள் தவறாக வழிநடத்துகின்றன. இந்த நபர்கள் லஞ்சம், ஊழல் அல்லது நீதியைத் தடுக்கும் சதி தொடர்பான எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அதிரடி காட்டிய செபி.. பின்வாங்கிய சி2சி IPO.. பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
அமெரிக்க செக்யூரிட்டிஸ் புகார் என்ன?
1933 இன் செக்யூரிட்டீஸ் சட்டம் மற்றும் 1934 இன் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் சட்டம் ஆகியவற்றின் குறிப்பிட்ட பிரிவுகளின் மீறல்கள் உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, குற்றவியல் எண். 24- சி.ஆர் 433, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்துக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிராக ஒரு சிவில் புகாரும் (வழக்கு எண். 1:24 சிவி. 8080) பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கணிப்பு
இதற்கிடையில், அதானி குழுமத்தின் பங்குகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என சந்தை பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் அபராதம் மற்றும் நெறிமுறை நடைமுறைகள் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது மட்டுமின்றி, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ இணக்கத்திற்கான விசாரணைகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : பான் கார்டு திருத்தம், புதுப்பிப்பு இலவசம்.. இந்தப் புதிய திட்டம் தெரியுமா?
அதானி பங்குகள் 10 சதவீதம் வளர்ச்சி
அதானி கிரீன் எனர்ஜியின் தலைவர் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி க்ரீன் எம்டி & சிஇஓ வினீத் ஜெயின் மீதான சர்ச்சைகள் குறித்து நிறுவனம் தெளிவுபடுத்தியதை அடுத்து, இன்று மற்ற அதானி குழுமப் பங்குகளுடன் அதானி க்ரீன் எனர்ஜியின் பங்குகளும் 10% வரை உயர்ந்தன.
மற்ற அதானி பங்குகளும் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளன. இந்தப் பங்குகள் வளர்ச்சி மூலம் அதானி நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.