PF பணம் ATM-மில் எப்போது வரும்? யார் யாருக்கு கிடைக்கும்?
PF Withdrawn From ATM: பி.எஃப் பணத்தை ஏ.டி.எம்.மில் எடுத்துக் கொள்ளலாம் என்ற தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது. பி.எஃப் பணம் எப்போது இருந்து ஏ.டி.எம்.மில் எடுத்துக் கொள்ளலாம்? எப்படி வரும்? சுருக்கமாக பார்க்கலாம்.
ஏ.டி.எம்.மில் பி.எஃப் பணம்: இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக, இ.பி.எஃப்.ஓ சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம்களில் இருந்து நேரடியாக எடுக்க முடியும் என்று மத்திய தொழிலாளர் செயலாளர் சுமிதா தவ்ரா கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பு நாடு முழுக்க வைரலாகி வருகிறது. ஏனெனில் செயலாளர் சுமிதா, “தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதற்கு அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து நாங்கள் சில வழிமுறைகளை உருவாக்கியுளோம். இதன்மூலம் வருங்காலத்தில் பி.எஃப் பணத்தை ஏ.டி.எம். மையங்களில் எடுக்கலாம். இந்தக் கோரிக்கை வசதியை நீங்கள் எளிதாக தீர்க்க முடியும்” என்றார்.
எப்போது சேவை அமலுக்கு வரும்?
இது குறித்து தொழிலாளர் நல அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தொழிலாளர் நலத்துறை செயலாளரும், தொழிலாளர் இந்த வசதியை எப்படி அணுக முடியும் என்பது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தொழிலாளர் நல அமைப்புகள் பல்வேறு சேவைகளை உருவாகி வருகின்றன.
இதன் நோக்கம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் சிறந்த சேவையை பெற வேண்டும் என்பதே. அந்த வகையில், நீங்கள் சிறந்த சேவையை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெறுவீர்கள். 2025 ஜனவரியில் இந்த சேவையில் ஒரு மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக, இந்தத் திட்டம் 2025 ஜனவரியில் நடைமுறைக்கு வரலாம் என்பது உறுதியாகிறது.
இதையும் படிங்க : PF Settlement Claim : பிஎஃப் செட்டில்மென்ட் க்ளெய்ம் செய்வதில் புதிய மாற்றம்.. இந்த 4 பேருக்கு விலக்கு!
எத்தனை பேர் பயனடைவார்கள்?
மத்திய அரசின் இந்த டிஜிட்டல் மயமாக்க அறிவின் மூலம் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். இந்தத் தகவலை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், இந்தச் சேவையை எளிதாக வழங்குவதற்கும் இ.பி.எஃப்.ஓ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் செயலாளர் சுமிதா தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான பேட்டியின் போது, தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவுபடுத்தும் திட்டங்களும் உள்ளன என்றார். மேலும், இந்தத் திட்டங்களில் முன்னேற்றங்கள் உள்ளன என்றார். எனினும் திட்டம் எப்போது வரும் என்பது போன்ற காலக்கெடுவை அவர் தவிர்த்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு
தொடர்ந்து பேசிய அவர், “நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன, இப்போது இறுதி செய்யும் செயல்பாட்டில் உள்ள ஒரு திட்டத்தை மட்டும் கூறியுள்ளோம்” என்றார்.
இதற்கிடையில் திட்டங்கள் பற்றி கூறுகையில், மருத்துவ சுகாதார பாதுகாப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊனமுற்ற சந்தர்ப்பங்களில் நிதி உதவி ஆகியவை அடங்கும் என்றார்.
பிரதிநிதிகள் குழு உருவாக்கம்
இதைத்தொடர்ந்து, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சார்ந்த நலன்கள் தொடர்பான சலுகைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை முன்மொழிய பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்தக் குழுவில் பல்வேறு பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தக் குழு நிறுவப்பட்டுள்ளது என்றார்.
யார் யார் தகுதி பெற்றவர்கள்?
இந்தத் திட்டத்தில் அனைத்து சந்தாதாரர்களும் ஏ.டி.எம் மூலமாக பி.எஃப் பணத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இதற்கிடையில், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவது பயனாளிக்கு இருக்கும் மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பி.எஃப் பணத்தை ஏ.டி.எம்.மில் எடுப்பது எப்படி?
இது குறித்த விவரங்கள் இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக இ.பி.எஃப் ஒரு தனி அமைப்பை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: உலகின் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள் யார்? முழு விவரம்