NEET UG Retest: நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்.. அதிர்ச்சி கொடுத்த தேசிய தேர்வு முகமை!
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதை பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சண்டிகரில் மறுதேர்வுக்கு தகுதியான இரண்டு மாணவர்களும் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதை பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாகவும், தேர்வெழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம் 1,563 மாணவர்களுக்கு வழங்கிய கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்படுவதாக என்டிஏ அறிவித்தது.
Also Read: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?
நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்:
இவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 1,563 மாணவர்களுக்கும் தேர்வு நடந்தது. இந்த நிலையில், மறுதேர்வில் 48 சதவீத மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சண்டிகரில் மறுதேர்வுக்கு தகுதியான இரண்டு மாணவர்களும் எழுதவில்லை. சத்தீஸ்கரில் 602 பேர் மறுதேர்வுக்கு தகுதி பெற்ற நிலையில், 311 பேர் தேர்வு எழுதவில்லை. ஹரியானாவில் 494 மாணவர்கள் மறுதேர்வுக்கு தகுதியான நிலையில், 207 பேர் தேர்வு எழுதவில்லை. மேகாலயாவில் 464 பேர் மறுதேர்வுக்கு தகுதியான நிலையில், 230 பேர் தேர்வு எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சிபிஐ வழக்குப்பதிவு:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை ஏற்றுள்ள சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (குற்ற சதி), 420 (மோசடி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
பொதுத்தேர்வு சட்டம்:
நீட், ஜேஇஇ, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வுகள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, பொதுத்தேர்வு சட்டம் (முறைகேடு தடுப்பு) 2024 இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சட்டத்தின்படி, மோசடியைத் தடுக்க குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். தேர்வு அலுவலர், சேவை வழங்குநர் அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் உட்பட ஒரு நபர் அல்லது ஒரு குழு குற்றத்தைச் செய்தால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீடிக்கப்படலாம். மேலும், ரூ.1 கோடிக்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.