School Leave: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. இன்று எத்தனை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் நகராமல் அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது. அட்சரேகை 9.0°N மற்றும் தீர்க்கரேகை 82.1°E, கிழக்கு-வடகிழக்கு 100 கி.மீ. திருகோணமலையின், நாகப்பட்டினத்திலிருந்து 320 கி.மீ தென்கிழக்கே, 410 கி.மீ புதுச்சேரிக்கு தென்கிழக்கே, சென்னைக்கு தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலைக்குள் ஃபெங்கல் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது தொடர்ந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. ஆனால் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையே உள்ளது. தொடர் கனமழை காரணமாக் இன்று நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எங்கே உள்ளது?
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் நகராமல் அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது. அட்சரேகை 9.0°N மற்றும் தீர்க்கரேகை 82.1°E, கிழக்கு-வடகிழக்கு 100 கி.மீ. திருகோணமலையின், நாகப்பட்டினத்திலிருந்து 320 கி.மீ தென்கிழக்கே, 410 கி.மீ புதுச்சேரிக்கு தென்கிழக்கே, சென்னைக்கு தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30- ஆம் தேதி காலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்.. எப்போது உருவாகும்? எந்த திசையில் நகரும்?
ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது முதலில் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் பின்னர் 10 கி.மீ ஆக குறைந்தது. அதனை தொடர்ந்து 3 கி.மீ வேகமாக குறைந்தது. எனவே தற்சமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை இருக்கும்?
இதன் காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு
வரும் 30 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.