NEET Re Exam Results: கருணை மதிப்பெண் விவகாரம்.. நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு..
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடுகருணை மதிப்பெண் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் 7 மையங்களில் ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடந்தது. இந்த தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: கருணை மதிப்பெண் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் 7 மையங்களில் ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடந்தது. இந்த தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. சண்டிகரில் மறுதேர்வுக்கு தகுதியான இரண்டு மாணவர்களும் எழுதவில்லை. சத்தீஸ்கரில் 602 பேர் மறுதேர்வுக்கு தகுதி பெற்ற நிலையில், 311 பேர் தேர்வு எழுதவில்லை.ஹரியானாவில் 494 மாணவர்கள் மறுதேர்வுக்கு தகுதியான நிலையில், 207 பேர் தேர்வு எழுதவில்லை. மேகாலயாவில் 464 பேர் மறுதேர்வுக்கு தகுதியான நிலையில், 230 பேர் தேர்வு எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
மறுதேர்வில் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைந்தது. பழைய பட்டியலில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது 61 ஆக குறைந்துள்ளது. முழு மதிப்பெண் பெற்ற 6 பேர் மறுதேர்வு எழுத தகுதிபெற்ற நிலையில், 5 பேர் மட்டுமே எழுதினர். இந்த 5 பேரும் 680 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற்றதால் 61 ஆக குறைந்துள்ளது.
Also Read: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?
மறுதேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- தேர்வர்கள் nta.ac.in/NEET என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் உள்ள NEET UG Results என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
- பின்னர், கேட்கப்பட்ட விவரங்களை உள்ளீட்டு SUBMIT ஆப்ஷனை க்ளிக் செய்தால் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
- பின்னர், தேர்வு முடிவுகளின் நகல் வேண்டுமானால் அதனை DOWNLOAD செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கருணை மதிப்பெண் சர்ச்சை:
2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆள் மாற்றம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என ஏகப்பட்ட புகார்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறைகேடுகள் தொடர்பாகவும், தேர்வெழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம் 1,563 மாணவர்களுக்கு வழங்கிய கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்படுவதாக என்டிஏ அறிவித்தது. இதனை அடுத்து மறுதேர்வு நடந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாகி உள்ளன.
Also Read: யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு.. புதிய அட்டவணை வெளியிட்ட என்டிஏ!