5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad By-Election: வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல்.. ஆர்வமுடன் வாக்களிக்க குவியும் மக்கள்…

Wayanad Constituency: 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் சட்டப்படி ஒருவர் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

Wayanad By-Election: வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல்.. ஆர்வமுடன் வாக்களிக்க குவியும் மக்கள்…
வாக்களிக்க வந்த மக்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Nov 2024 07:15 AM

வயநாடு இடைத்தேர்தல்:  கேரள மாநிலம் வயநாட்டில் காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்பு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில் வயநாடு தொகுதியில் பெருவாரியாக வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வெற்றியும் ராஜினாமாவும்

இப்படியான நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் சட்டப்படி ஒருவர் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

இந்த நிலையில்தான் ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிவு செய்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்படியான நிலையில்தான் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தலில் நடைபெறுகிறது. அதனையொட்டி காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

வயநாடு இடைத்தேர்தல்

அந்த வகையில் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்திக்கு பதிலாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி களம் காண்கிறார். இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டு வந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதால் வயநாடு தொகுதிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியன் முகேரி மற்றும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். அந்த தொகுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் பரப்பரை மேற்கொண்டனர். அப்போது மக்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “வயநாடு தொகுதி மக்கள் சரியான அரசியலை அங்கீகரித்து தேர்வு செய்கிறார்கள். கள நிலவரம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். வயநாட்டில் நான் எங்கு சென்றாலும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மேலோங்கி காண முடிகிறது. இங்கு உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அமைதியாக இருக்கிறது. மதங்களை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடித்துவிட்டு வயநாடு மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தபோது ”ஐ லவ் வயநாடு” என்ற வாசகம் பொறித்த டீ-சர்ட்டை அணிந்திருந்தார். அதுதொடர்பாக பேசிய அவர், “நான் பாரத் ஜோடா யாத்திரை தொடங்கிய போது அது மிகப்பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அந்த யாத்திரையின் நோக்கம் அரசியல் மட்டும் தான். ஆனால் அது தொடங்கிய போது மக்கள் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டனர். என் மீது அன்பு செலுத்துவதாக தெரிவித்தனர். அப்போது தான் அரசியலில் அன்பு என்ற வார்த்தை இல்லாமல் போய் பல ஆண்டுகள் ஆனதை நான் உணர்ந்தேன். வயநாட்டுக்கு வந்த பிறகு அரசியலில் அன்பு குறித்து பேச ஆரம்பித்தேன். என் மீது மிகுந்த பாசமும் அன்பும் வயநாடு மக்கள் வைத்திருக்கிறார்கள். அரசியலில் அன்பு என்பதை அவர்கள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்” என தெரிவித்தார்

Latest News