MohanLal: பாலியல் புகாரால் தொடர் நெருக்கடி.. மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா!

கேரளா அரசு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. இதன் மூலம் மலையாள சினிமாவில் பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீதான பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவில் நடிகை சாரதா உள்ளிட்ட சில நடிகைகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வத்சலா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

MohanLal: பாலியல் புகாரால் தொடர் நெருக்கடி.. மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா!

கோப்பு புகைப்படம்

Published: 

27 Aug 2024 17:26 PM

அம்மா சங்கம்: மலையாள சினிமா உலகில் மிகப்பெரிய புயலாக அமைந்துள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. தொடர்ச்சியாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. பொதுவாக திரையுலகில் பெண்களுக்கு பாலியல் சார்ந்த தொந்தரவுகள் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வெளிவருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மீ டூ என்ற அமைப்பின் மூலம் தொடர்ச்சியாக பிரபலங்கள் மீது பெண் கலைஞர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் கேரளா அரசு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. இதன் மூலம் மலையாள சினிமாவில் பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீதான பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவில் நடிகை சாரதா உள்ளிட்ட சில நடிகைகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வத்சலா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

வெளிவந்த உண்மை

இந்த கமிட்டியின் அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கேரளா அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை வெளியிடாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஹேமா கமிட்டி அறிக்கையின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே கடந்த வாரம் வெளியானது.

இதில் கேரள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் அவர்களுக்கு முன்னணி பிரபலங்களால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட செய்யப்படுவதாகவும் ஹேமா கமிட்டி அருகில் குறிப்பிடப்பட்டது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகை சார்ந்த பெண்கள் தொடர்ச்சியாக நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார்களை அடுக்கி வருகின்றனர்.

சிக்கிய பிரபலங்கள்.. மௌனம் காத்த அம்மா 

குறிப்பாக நடிகர்கள் ஜெயசூர்யா, இயக்குனர் சித்திக், மலையாள சினிமா அகடமி தலைவர் இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ரியாஸ் கான், மணியம் பிள்ளை ராஜு, முகேஷ், இடைவேலை பாபு உள்ளிட்ட பிரபங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற திரையுலகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த மலையாள உலகில் இப்படி ஒரு விஷயங்கள் நடக்கிறதா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது.

அதேசமயம் நாளுக்கு நாள் பாலியல் தொடர்பான புகார்கள் குவிந்து கொண்டே வந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானது. ஏற்கனவே நடிகர் சங்கத்தில் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் சித்திக் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து தனது பதவியை சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதேசமயம் சித்திக் சொன்ன கருத்தால் நடிகர் சங்கத்துக்குள் கருத்து மோதல் உண்டானது.

இந்த புகார்கள் தொடர்பாக இதுவரை போலீசில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என நடிகர் சுரேஷ் கோபி இன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.  இதனிடையே இன்றைய தினம் மலையாள நடிகர் சங்கம் அவசரமாக செயற்குழு கூட்டத்தை கூட்டியது. இதில் தலைவர், தற்காலிக பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள்,  நடிகைகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் மோகன்லால் உட்பட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஹேமா கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் பாதிக்கப்பட்ட பெண் பிரபலங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கேரளா அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?