Tamil Cinema: தொடரும் வேட்டை.. ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!
Highest Collection Movies :தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்குத் தனி கொண்டாட்டம்தான். அதிலும் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்கும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இதுவரை ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ.!
தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்குக் கொண்டாட்டம் தான், அதிலும் அவர்களுக்குப் பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் அவர்களைக் கையிலே பிடிக்க முடியாது. தமிழ்த் திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகர்களாக இருந்துவரும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ். தற்போது இவர்களை ஈடுகட்டும் வகையில் முன்னேறிவரும் நடிகர்தான் சிவகார்த்திகேயன். இவ்வாறு தமிழ்த் திரைப்படங்களில் முன்னிலை வகிக்கும் கதாநாயகர்களின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்புகளைத் தாண்டி இதுவரை ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன மற்றும் அவரின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
ரஜினிகாந்த்
இந்த லிஸ்டில் முதலாவது இருப்பது ரஜினிகாந்த். இயக்குநர் எஸ். ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான எந்திரன். நடிகர் ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய், டோனி டென்சோங்பா மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியது.
பின் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ 320 கோடிகளை வசூல் செய்து ஹிட் திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு இதன் தொடர்ச்சியான 2.0 என்ற திரைப்படமும் சுமார் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து. இதையடுத்து ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் ஜெயிலர் போன்ற திரைப்படங்களும் இவருக்கு ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
கமல்ஹாசன்
இந்த லிஸ்ட்டில் இரண்டாவதாக இருப்பது நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூலை குவித்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து, விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் , நரேன் , காளிதாஸ் ஜெயராம் , காயத்ரி , செம்பன் வினோத் ஜோஸ் , சந்தான பாரதி எனப் பலரும் நடித்திருந்தனர். இயக்குநர் லோகேஷின் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் இரண்டாவது திரைப்படமான இது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 450 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மணிரத்னம்
மூன்றாவதாக இருப்பது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன். 2022ம் ஆண்டு வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விக்ரம் , கார்த்தி , ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் பச்சன் , த்ரிஷா , ஜெயராம் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி , சோபிதா துலிபாலா , பிரகாஷ் ராஜ் , பிரபு , ஆர். சரத்குமார் , ஆர். பார்த்திபன், மாறும் விக்ரம் பிரபு எனப் பல தமிழ் பிரபலங்களும் நடித்திருந்தனர்.
சோழர்களின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் மொத்தம் 2 பாகங்களாக உருவாகியது. மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த இரண்டு பாகங்களும் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
விஜய்
இந்த பட்டியலில் 4வது நடிகர் விஜய் உள்ளார். அவர் கேரியரில் ரூ,300 கோடி வசூல் செய்த முதல் படம் பிகில். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் நயன்தாரா , ஜாக்கி ஷெராஃப் , விவேக் , கதிர் , டேனியல் பாலாஜி , ஆனந்தராஜ் , யோகி பாபு , ஐ.எம்.விஜயன் என பல பிரபலங்களும் நடித்திருந்தனர்.
சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூ 320 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு, லியோ மற்றும் தற்போது வெளியான கோட் போன்ற திரைப்படங்களும் ரூ.300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விஜய்க்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன்
இந்த வரிசையில் தற்போது வளர்ந்துவரும் உச்ச நடிகரான சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான அமரன் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் , நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்தனர்.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான சுமார் ரூ 120 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலே சுமார் ரூ.42.3 கோடி வசூலைப் பெற்றது இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 18 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது ரூ 296 கோடியை வசூல் செய்துள்ளது இன்னும் கூடிய விரைவில் இந்த திரைப்படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.