சுயமரியாதை தான் முக்கியம்… ‘குக்வித் கோமாளி’-யில் இருந்து வெளியேறிய மணிமேகலை – வைரலாகும் போஸ்ட்
Cook With Comali Season 5: இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுஜிதா, அக்ஷய் கமல், இர்பான் மற்றும் பிரியங்கா ஆகியோர் செமி ஃபைனல்ஸ் போட்டியில் போட்டியிட்டனர். இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போதே பாதியில் நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை சில தவிர்க்க முடியாத காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
சுயமரியாதை தான் முக்கியம் என்று ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமெடியை அடிப்படையாக கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. கடந்த 4 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த 4 சீசன்களாக நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருந்தனர். சின்னத்திரையில் ரசிகர்களுக்குப் பிடித்த சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது ‘குக் வித் கோமாளி’. வழக்கமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களிலேயே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் அடுத்த சீசனைத் தொடங்குவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக் முதல் கோமாளிகள் வரை பெரும்பாலானோர் அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி வருவதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகரும் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் செஃப் தாமுவுடன் இணைந்து நடுவராக செயல்பட்டு வருகிறார்.
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியின் போட்டி சேனலான சன் டிவியில் குக் வித் கோமாளியைப் ’போலவே டாப்பு குக் டூப்பு குக்’ என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேறபைப் பெற்று வருகிறது.
பல குழப்பங்களுக்கு இடையே கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தொடங்கியது. இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வசந்த், தொகுப்பாளினி பிரியங்கா, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். மேலும், ராமர், புகழ், நாஞ்சில் விஜயன், குரேஷி ஆகியோருடன் புது கோமாளிகளும் இணைந்தனர்.
5-வது சீசன் தொடங்கப்பட்டு ஒரு எபிசோடு மட்டுமே ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நாஞ்சில் விஜயன். நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டார்.
இந்த நிலையில் இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுஜிதா, அக்ஷய் கமல், இர்பான் மற்றும் பிரியங்கா ஆகியோர் செமி ஃபைனல்ஸ் போட்டியில் போட்டியிட்டனர். இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போதே பாதியில் நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை சில தவிர்க்க முடியாத காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குக் வித் கோமாளியில் மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொடுக்கிறேன். 2019 நவம்பரில் இருந்து CWC க்கு இதே நிலைதான், அங்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது.
Also read… நடிகர் உபேந்திரா ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் காரணம் இதுதானா – அவரே சொன்ன தகவல்
ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளியிலிருந்து விலகிவிட்டேன்.
இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார், குறிப்பாக ஆங்கர்ஸ் பார்ட்டில், அவர் நிகழ்ச்சியின் சமையல் போட்டியாளராக இருக்க வேண்டும், ஆனால் அவர் அதை அடிக்கடி மறந்துவிடுவார் & வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். நமது உரிமைகளைக் கேட்பதும் கூட இந்தப் பருவத்தில் குற்றமாகிவிடும். ஆனால் எப்போதும் எனக்கு எது சரியானதோ அதற்காக குரல் எழுப்புவதில் நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் ஆதிக்கம் நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே CWC அல்ல. எனவே நான் இனி அதன் பகுதியாக இல்லை.
நான் 2010 முதல் இந்தத் துறையில் இருக்கிறேன், இது எனது 15வது ஆண்டாக ஆங்கராக உள்ளது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தன ஆனால் இதுபோன்ற முதிர்ச்சியற்ற நடத்தைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவளுக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழ்க & வாழ விடு. என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் மணிமேகலை கூறியிருப்பது பிரியங்காவைதான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக நிகழ்ச்சியின் பல எபிசோடுகளில் ஆங்கர் மணிமேகலை செய்யவேண்டிய வேலையை பிரியங்கா போட்டியாளர் என்பதையும் மறந்து இடையில் பேசுவது இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்த நிலையில் மணிமேகலையின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.