Mari Selvaraj: மாரிசெல்வராஜின் சொந்த வாழ்க்கை.. வாழை படம் கதை இதுதான்!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் வாழை படம் அடியில் இருக்க மேல்மட்டமாக செய்த படமாகும். வாழை கதையின் தாக்கம் இந்த மூன்று படங்களிலும் இருக்கும். இந்த மூன்று படங்களும் எடுத்த பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என எடுத்த படம் தான் வாழை. அதனால் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் உணர்வு வேறு மாதிரி இருக்கும்.
வாழை படம்: இயக்குநர் ராமிடம் உதவியாளராக பணியாற்றி 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநரானவர் மாரி செல்வராஜ். சமூகம் சார்ந்த பிரச்னைகளின் தீர்வு கண்ணோட்டத்தை தனது படங்களின் வாயிலாக வைக்கும் அவர் அடுத்ததாக கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார். இவர் தற்போது வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள வாழை படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. இதனிடையே இப்படம் பற்றி நேர்காணல் ஒன்றில் பல தகவல்களை மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் வாழை படம் அடியில் இருக்க மேல்மட்டமாக செய்த படமாகும். வாழை கதையின் தாக்கம் இந்த மூன்று படங்களிலும் இருக்கும். இந்த மூன்று படங்களும் எடுத்த பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என எடுத்த படம் தான் வாழை. அதனால் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் உணர்வு வேறு மாதிரி இருக்கும். இந்தப் படத்தின் சிறப்பு காட்சியின் போது மறக்க முடியாத சம்பவம் போன்ற நடந்தது. சித்தார்த் நடித்த சித்தா படத்தின் இயக்குனரான அருண்குமாரின் உதவியாளர் ஒருவர் என்னை படம் முடிந்ததும் வந்து சந்தித்தார். படம் பார்த்து முடித்ததும் எல்லோரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.
அருண்குமாரின் உதவியாளர்களில் ஒருவர் என்னிடம் வந்து ரொம்ப அழுதார். நான் என்னவென்று விசாரிக்க, “நான் மாமன்னன் படம் பார்த்துவிட்டு உங்களை ரொம்ப திட்டி விட்டேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”எனக்கூறி அழுது கொண்டே இருந்தார். அருண்குமார் அந்த நபரை தேற்றி அங்கிருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு, அவர் என்னிடம், எனக்கு இப்போதுதான் அவன் உங்களை திட்டியது தெரியும். எதற்கு திட்டினார் என்ன தெரியவில்லை. காரணத்தை அவனிடம் கேட்க முடியாது. ஆனால் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டான் என சொன்னார்.
அந்த இடத்தில்தான் இந்த படம் வெற்றி அடைந்து விட்டதை நான் உணர்ந்தேன். என்னுடைய படத்தை பார்ப்பது மட்டுமில்லாமல் யார் இவன் என என்னை பற்றிய ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. படத்தில் பேசப்படும் விஷயங்களை சொல்வதற்கு இவன் யார் என சிந்திக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் படமாக தான் வாழை இருக்கும். அவர்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான் நீ ஏன் என்னை பற்றி யோசிக்கிறாய்?. நானே என்னை பற்றி சொல்கிறேன் என்பதுதான். ஒரு பகிரங்க வாக்குமூலம், சுயசரிதை, என் வாழ்க்கையின் ஒரு வருடம் என என்பது கூட சொல்லலாம். எதற்காக சினிமாவுக்குள் வந்தோமோ, எந்த படம் எடுக்க வேண்டும் நினைத்தமோ அது வாழை தான். இந்த படம் ரிலீஸ் ஆவது என்னுடைய சாதனைதான்” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.