Mysskin: சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்.. இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

பார்வையாளர்களுக்கு ஓடிடி தளத்தில் பார்ப்பதற்கு நிறைய படங்கள் உள்ளது. நாள் முழுக்க உபயோகிக்க சமூக வலைதளங்கள் உள்ளது. இதையும் தாண்டி ஒரு வலுவான கதை சொல்ல வேண்டும் என்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாமும் சினிமாவில் கற்றுக் கொண்டு வளர்கிறோம்.

Mysskin: சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்.. இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

சூர்யா - மிஷ்கின்

Published: 

14 Dec 2024 08:44 AM

நடிகர்களை கருணையோடு பார்க்க வேண்டும் என அலங்கு திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் விலங்கு கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் அலங்கு. இந்தப் படத்தை சக்திவேல் இயக்கியுள்ள நிலையில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், ஸ்ரீ ரேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. அலங்கு படத்தை சபரீஷ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பங்கேற்று பேசினார்.

மிஷ்கினின் மறக்க முடியாத சம்பவம்

ஒரு மேடையில் போய் என்ன பேச வேண்டும் என்பது குழப்பமாக இருக்கும். இந்த படத்தின் போஸ்டரில் இருந்து தொடங்குகிறேன். நான் நாய்களோடு பழகி இருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன். சிறுவயதில் தனிமையில் இருக்கும் போது நாயிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். எனக்கு மணி என்ற நாய் ரொம்ப நெருக்கமானது. அப்படிப்பட்ட நாயை இதுவரை நான் வேறு எங்கும் பார்க்கவே இல்லை. நம்மை பாதுகாக்கும் ஒரு தெய்வமாக நாய் இருக்கும். ஒரு ஆதி தகப்பன் போல் எப்போதும் எங்களுடைய நாய் இருக்கும். \

5 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அந்த நாயை காணவில்லை. நான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அம்மாவிடம் நாய் எங்கே எனக் கேட்டபோது என்னுடைய பாட்டி அதற்கு மனநிலை பாதித்துவிட்டதாக சொன்னார்கள். அதை கொல்ல போகிறார்கள் என தெரிவித்தார். இதைக் கேட்டு நான் அங்கிருந்து ஓடினேன். ஊரில் நாயை கொலை செய்வதற்கு என்று ஒருத்தர் இருந்தார். கிட்டத்தட்ட கருணை கொலைக்கு சமமாக அந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு சாக்கில் அந்த நாயை போட்டு கடப்பாரை கொண்டு அடித்துக் கொன்றார்கள். என்னால் அதை இன்றளவும் மறக்க முடியவில்லை.

Also Read: Allu Arjun: சிறையிலிருந்து விடுதலை.. அல்லு அர்ஜூன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

ஆனால் நாய் என சொன்னால் இந்த சமூகம் கீழ்த்தரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு படம் எடுத்து அது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு கலை வடிவமாக மாறுவது என்பது கடினமான விஷயம். இன்று (நேற்று) பணிகளை மேற்கொண்டிருக்கும்போது நடிகர் ஒருவரின் கைது பற்றிய செய்தியைப் பார்த்தேன். ஒரு திரைப்படம் பார்க்க நடிகர் வந்து அதனால் மக்கள் வேகமாக ஓடிப்போனார்கள். அதில் ஒரு பெண் இறந்து விட்டார். நடந்த சம்பவத்திற்கு அந்த கதாநாயகனும் வருத்தப்படுகிறார்.

சினிமாக்காரர்களான நாங்களும் ஒரு நாய்களை போல தான். எதோ ஒரு ஊரில் இருந்து வந்து நடித்து நீங்கள் அதை பாருங்கள் என சொல்கிறோம்.உங்கள் காசை வைத்து தான் நாங்கள் சாப்பிடுகிறோம், காரில் போகிறோம்.

சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்

கொஞ்ச நாள் முன்னால் ஒரு பெரிய படம் (கங்குவா)தோல்வி அடைந்தது. ரசிகர்கள் அந்த படத்தை பயங்கரமாக விமர்சனம் செய்தனர். அதற்கு எல்லா உரிமையும் உள்ளது. இந்த படம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பத்திரிக்கையாளர்களும் பார்வையாளர்களும் அதனை கொண்டு போய் சேர்ப்பார்கள். அந்தப் படத்தில் ஒரு உண்மை இருந்தால் கூட போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி விடுவார்கள்.

பார்வையாளர்களுக்கு ஓடிடி தளத்தில் பார்ப்பதற்கு நிறைய படங்கள் உள்ளது. நாள் முழுக்க உபயோகிக்க சமூக வலைதளங்கள் உள்ளது. இதையும் தாண்டி ஒரு வலுவான கதை சொல்ல வேண்டும் என்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாமும் சினிமாவில் கற்றுக் கொண்டு வளர்கிறோம். சினிமாவை பார்த்து நம்மை விட இரு மடங்கு அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் ஒரு படம் நன்றாக இல்லாத போது அவர்களுக்கு கோபம் வந்து விடுகிறது.

Also Read: Crime: சென்னை வந்து ரூம் போட்டு நகைகள் திருட்டு.. திருச்சியில் சிக்கிய இளைஞர்

கேமராவை காட்டும் போது அதில் அவர்கள் வெகுண்டு எழுந்து சில மோசமான வார்த்தைகள் பேசி விடுகிறார்கள். கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. அதன் விமர்சனங்களை பார்த்தேன். நான் கேட்டுக் கொள்வது ஒன்று மட்டும் தான். நடிகர்களை கருணையோடு பாருங்கள். சூர்யா போன்ற ஒரு நல்ல நடிகர், அழகான நடிகரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிவாஜி,எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் நம்மிடையே இல்லை.

ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவகுமார் என்ற மனிதரை பார்க்க வேண்டும். இப்படி பேசும் போது அடுத்து நீங்கள் சூர்யாவிற்கு படம் பண்ணுகிறீர்களா என்று கேள்வி எழும். நான் அவருக்கு கதை சொல்லப் போவதில்லை. படம் கொடுத்தால் கூட நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். கருணையோடு மட்டும் தான் பார்க்க சொல்கிறேன். ஒரு படத்தை உருவாக்க நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று சொல்லி நாங்கள் புலம்பவில்லை. வாழ்க்கை மறந்து வேலை செய்கிறோம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மிஷ்கின் பேசினார்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்
தினமும் பிஸ்தா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமா..? இந்த 9 உணவுகள் உதவும்..!
அதிகப்படியான உப்பு சாப்பிட்டால் என்னாகும்?