Amaran: முகுந்த் வரதராஜனுக்கு சாதி அடையாளம் தேவையில்லை.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
Amaran Success Meet: மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளங்கள் படத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த அவரின் அடையாளங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அதேசமயம் அவரது மனைவி இந்துவின் அடையாளங்கள் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அமரன் படம்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் திரையரங்க விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அமரன் படத்தின் வெற்றி விழா
ராணுவத்தில் இருக்கும் கடினமான நிலைகளையும், அங்கு பணி செய்வதன் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அமரன் படம் இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளங்கள் படத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த அவரின் அடையாளங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அதேசமயம் அவரது மனைவி இந்துவின் அடையாளங்கள் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
Also Read: இந்த சிறுமி இப்போது கோலிவுட் நாயகி.. யாருனு கண்டுபிடிக்க முடியுதா?
இந்த நிலையில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அமரன் படத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “எல்லோருக்கும் வணக்கம். நான் முதலில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
அக்டோபர் 31ம் தேதி அமரன் படம் வெளியானது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சி முடிந்த போது படம் பார்த்த பத்திரிக்கை துறையினர் முகத்தில் தெரிந்த உணர்வுகள் இப்போது வரை எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது. பல பாராட்டுக்கள் வந்தாலும் முதல் பாராட்டு அந்த சிறப்பு காட்சியில் தான் வந்தது. அமரன் படத்தின் வெற்றி நம்பிக்கை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகள் பண்ண வேண்டும் என தோன்றுகிறது.
என்னை பார்ப்பவர்கள் இந்த படத்தில் இது நிஜம், எது கற்பனை, உண்மையில் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததா என கேட்கிறார்கள். ஒரு உண்மை கதை அது எல்லைக்குட்பட்ட திரைக்கதையுடன் எழுதப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. கடைசி நிமிடம் வரை போஸ்ட் ப்ரொடக்ஷனில் மிகப்பெரிய டென்ஷன் இருந்தது. ரொம்ப கடினமாக இருந்தது. அமரன் படத்தை ஒரு வரியில் சொல்வதென்றால் ஒரு வீரனுடைய வாழ்க்கை வீராங்கனையின் பார்வையிலிருந்து என சொல்லலாம்.
Also Read: ’தி கோட்’ பட வசூலை மிஞ்சும் ‘அமரன்’ .. தெலுங்கில் சீறும் கலெக்ஷன்!
விமர்சனங்களுக்கு பதிலடி
மேஜர் முகுந்து வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியரின் வாழ்க்கை தான் இப்படத்தில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அமரன் படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்கள் எழுந்தது. இந்தப் படத்தை நாங்கள் எடுக்க போது இந்து ரெபேக்கா வர்கீஸ் வைத்த கோரிக்கை என்னவென்றால் மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு தமிழர். அந்த கேரக்டருக்கு தமிழில் உள்ள நடிகரை நடிக்க வையுங்கள் என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் ஒரு தமிழர் அடையாளம் மட்டும்தான் இந்த படத்தில் இருக்க வேண்டும். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வைத்த கோரிக்கை அது.
அதனடிப்படையில் பச்சைத்தமிழரான சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். அதனைத் தவிர்த்து முகுந்த் பெற்றோர் என்னிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால் அவன் தன்னை எப்போதும் இந்தியன் என சொல்லிக் கொள்ளதான் ஆசைப்படுவான். தன்னுடைய சான்றிதழ்களில் கூட எந்த வித குறியீடும் இருக்கக் கூடாது என நினைப்பான். அதனால் படத்தில் இந்தியன், தமிழன் என அடையாளப் படுத்தினால் போதும். இதையெல்லாம் தாண்டி ஒரு கலை படைப்பாளியாக ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் படம் எடுத்துள்ளோம். அதில் அவர் இன்னார் என சமூகத்தை குறிப்பிடுவது தவறான விஷயம். மேஜர் முகுந்த் வரதராஜன் அசோக் சக்ரா விருது பெற்றவர். அவர் செய்த சிறப்பான பணிக்கும், தியாகத்துக்கும் அமரன் படம் சரியான மரியாதை செய்து இருக்கிறது என நம்புகிறேன்” என ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.