Vetrimaaran: மேடையில் கடுப்பான வெற்றிமாறன்.. பதறிய விஜய்சேதுபதி, சூரி.. என்ன நடந்தது?
Viduthalai 2: 2020 ஆம் ஆண்டு விடுதலை படத்தின் கதையை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அந்த உழைப்பானது ஒரு சிலரின் ஆர்வம் மேல் மற்றவர்கள் எல்லோரும் கண்மூடித்தனமாக வைக்கும் நம்பிக்கை மூலம் தான் முழுமையாகும்.
விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது டென்ஷனாகி பாதியிலேயே பேச்சை நிறுத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் வாத்தியார் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தோன்றியிருந்தார். முதல் பாகத்தில் சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜுவ் மேனன், பவானி ஸ்ரீ என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Also Read: Viduthalai 2: வீரமும் காதலும்… வெளியானது விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ட்ரெய்லர் வெளியீட்டு விழா
இதனிடையே விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பின்னணி குறித்து பெரிதாக காட்சிப்படுத்தப்படாத நிலையில் இரண்டாம் பாகம் முழுக்க அவரைப் பற்றிய கதையாக தான் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இதனிடையே விடுதலை 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சூரி, இளையராஜா, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன் என படத்தில் இடம்பெற்ற பலரும் பங்கேற்றனர்.
#Vetrimaaran got angry on Stage and wrapped his speech quickly..😥 pic.twitter.com/KHkJc93uA2
— Laxmi Kanth (@iammoviebuff007) November 26, 2024
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “ 2020 ஆம் ஆண்டு விடுதலை படத்தின் கதையை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அந்த உழைப்பானது ஒரு சிலரின் ஆர்வம் மேல் மற்றவர்கள் எல்லோரும் கண்மூடித்தனமாக வைக்கும் நம்பிக்கை மூலம் தான் முழுமையாகும். அதை புரிந்துக்கொண்ட இந்த குழுவில் 450 பேர் இருந்தனர். அனைவருமே இந்த பயணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தான் பயணித்தோம். இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இதுபோன்ற ஒரு குழு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று சொல்லலாம்.
அவர்கள் இல்லை என்றால் நிச்சயம் இயக்குநர் என்ற பெயர் எனக்கு கிடைத்திருக்காது.. மேலும் இந்த படத்திற்குள் இளையராஜா வந்தது என்னுடைய அதிர்ஷ்டம். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயமாக உள்ளது. விடுதலை 2 படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும். 8 நாட்கள் தான் கால்ஷீட் என விஜய் சேதுபதியை இந்த படத்திற்கு அழைத்து 2 பாகங்கள் சேர்த்து மொத்தம் 257 நாட்கள் ஷூட் செய்து விட்டேன். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
கடுப்பான வெற்றி மாறன்
இந்த நிகழ்ச்சியில் விடுதலை 2 படத்திற்காக உழைத்தவர்கள் என யார் பெயரையும் குறிப்பிடாமல் அனைவருக்கும் நன்றி என வெற்றிமாறன் பொதுவாக தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த ஒருவர் பெயரை சொல்லுமாறு தெரிவிக்க கடுப்பான வெற்றிமாறன் “நான்தான் யார் பெயரையும் சொல்ல மாட்டேன் என சொல்லிவிட்டேன். டீம் என்று சொன்னாலே எல்லோரும் தான்” எனக்கூறி கோபத்தில் மைக்கை வைத்து விட்டு சென்று விட்டார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: பாடகி ஜோனிதா காந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்!
வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்
இதனிடையே விடுதலை 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ஏகப்பட்ட அரசியல் தொடர்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக “நிலம், இனம், மொழி என பிரிந்த மக்களை ஒன்று சேர்க்கும் வேலையை நாங்கள் ஆரம்பிச்சப்போ நீங்க கட்டமைச்ச சாதி மதம் பிரிவினைவாதத்தால் அரசியல் பண்ண முடியாமல் போச்சு” என விஜய் சேதுபதி வசனத்துடன் அந்த டிரெய்லர் தொடங்குகிறது. மேலும் கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், வின்சென்ட் அசோகன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் என இரண்டாம் பாகத்திலும் ஏகப்பட்ட பிரபலங்கள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.