Yuvan Shankar Raja Birthday Special: வழிப்போக்கர்களின் வாழ்வில் இசையுடன் தோன்றியதற்கு நன்றி, யுவன்!

நகரத்தின் இளசுகளின் காதலை இசைக்கும் அதே யுவன், கிராமத்து வாசனை மாறாமல், அந்தக் காதலையும் மிக அழகாக கடத்தியிருக்கிறார் தனது இசையின் மூலம். மகிழ்வான நேரங்கள் மட்டுமல்ல, மிகவும் பெர்சனலான துயரங்களிலும் தோள் கொடுத்தது யுவன் தான். அவரது குரலில் அவர் பாடும், ‘அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்.. அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்’ என்று பாடும் போது சேராத காதலை நினைத்து கண்ணீர் சிந்துவது ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் தான்.

Yuvan Shankar Raja Birthday Special: வழிப்போக்கர்களின் வாழ்வில் இசையுடன் தோன்றியதற்கு நன்றி, யுவன்!

யுவன்

Updated On: 

18 Nov 2024 19:04 PM

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். இந்த பிரபஞ்சம் முழுவதும் பல மொழிகள் பரவிக் கிடந்தாலும் அனைத்து மக்களாலும் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு மொழி என்றால் அது இசை தான். அந்த பாடலின் வரிகளே புரியவில்லை என்றாலும் பலரும் அந்த இசையை கேட்டு மெய்மறந்து நின்றதுண்டு. அவ்வாறு இசை நம் மக்களிடையே ஆட்சி செய்து வருகிறது. ஆதிமனிதன் முதல் தற்போதைய ’இன்ஸ்டா ரீல்ஸ்’ இளைஞர்கள் வரை, வெவ்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது இசை. கால இடைவெளிகளையும், தலைமுறை மாற்றங்களையும் கடந்து தமிழ்நாட்டின் மில்லெனியல்களின் வாழ்க்கையில் இசையால் நிறைந்திருக்கிறார் ஒருவர். அவர், யுவன் ஷங்கர் ராஜா.

1996-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையின் மூலம் தாக்குவதும் அவர்களை மீண்டும் தன் இசை மூலமாகவே மீட்டெடுக்கவும் ஒருவரால் முடிகின்றது என்றால் அவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. ராஜா, ரஹ்மான் வரிசையில் ஒரு தலைமுறையைத் தன் விரல் நுனியில் எழும் இசையாலும், பிரத்யேக ‘ஹம்மிங்’ குரலாலும் வசியப்படுத்தியவர் யுவன். இசையை விரும்பிக் கேட்கும் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்; ‘யுவன் எங்கள் பால்யத்தின் ஒரு பகுதி’ என்ற பதிலை நிச்சயம் சொல்வார்கள்.

கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் தான் யுவன் இசையில் வெளிவந்த முதல் படமாகும். பின்னர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. தனிமை என்பதைத் தனியாகக் கழித்தவர்களைவிட, யுவனின் இசையோடு கழித்தவர்கள் அதிகம். ஒரு தலைக் காதலர்களும், காதலை வெளிப்படுத்தாதவர்களுக்கும் யுவனின் இசை மட்டுமே துணை. “இது காதலா, முதல் காதலா..” என்று உருகியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு ஆண்கள்; ’பேசுகிறேன், பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்’ என்று மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள். யுவன், ஒரு தலைமுறையின் அடையாளம்.

ஒவ்வொரு தனி மனிதனின் காதலுக்கும் பொருந்தும் இயல்பான இசை யுவனுடையது. யுவனின் ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடலைக் கேட்டு, அழுகாத கண்கள் இல்லை என்றே சொல்லலாம். சோகத்தில் மட்டும் இல்லாமல் திகட்டத் திகட்ட காதலில் திளைத்திருந்த ஒரு தலைமுறைக் காதலர்களின் சொத்தாக இருந்திருக்கிறது யுவனின் இசை. நந்தாவின் ‘முன் பனியா? முதல் மழையா?’ என்ற யுவனின் பாடல் தொடங்கும் போதே, நாமும் காதலிக்கத் தொடங்கி விடுகிறோம்.

‘கற்றது தமிழ்’ பாடல்கள் யுவனின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே இசை ரசிகர்களின் மனதிற்கு நெறுக்கமான ஒன்றாகவே உள்ளது. தற்போது லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் என்று சொல்லக்கூடிய காதலையும் அந்த காதலர்களின் தூரத்தின் வலியையும் பாடலாசிரியர் முத்துக்குமாரின் வரிகளுடன் இணைந்து உருக வைத்திருக்கும் யுவனின் இசை. “உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே” என்ற முத்துகுமாரின் வரிகளுக்கு யுவன் அமைத்த மெட்டு இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

நகரத்தின் இளசுகளின் காதலை இசைக்கும் அதே யுவன், கிராமத்து வாசனை மாறாமல், அந்தக் காதலையும் மிக அழகாக கடத்தியிருக்கிறார் தனது இசையின் மூலம். மகிழ்வான நேரங்கள் மட்டுமல்ல, மிகவும் பெர்சனலான துயரங்களிலும் தோள் கொடுத்தது யுவன் தான். அவரது குரலில் அவர் பாடும், ‘அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்.. அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்’ என்று பாடும் போது சேராத காதலை நினைத்து கண்ணீர் சிந்துவது ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் தான். குறிப்பாக காதல் தோல்விப் பாடல்களில் யுவனின் ஹம்மிங் வரும் பகுதிகளுக்கு மட்டும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தனிமை நிறைந்த இரவுகளில், ‘எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும், அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!’ என்று பாடும் ‘புதுப்பேட்டை’ பாடல் தரும் வாழ்க்கை மீதான நம்பிக்கை வேறெதிலும் கிடைக்காது. இசையின் வழியாக நம்பிக்கை கொள்ளச் செய்யும் யுவனின் மாயம் நிச்சயம் புரியும். அம்மாவிற்கு ராம் படத்திலிருந்து ’ஆராரிராரோ’… அப்பாவிற்கு ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ மகளுக்கு ‘ஆனந்த யாழை’ என்று உறவுகள் மீதான மனிதர்களின் பினைப்பை தனது இசை மூலம் இன்னும் அதிகமாக தூண்டியவர் யுவன். நம் சோகம், துக்கம், காதல், காமம், நட்பு என எல்லாவற்றிலும் நம் ஆன்மாவைத் தொடும் தன் இசையின் மூலம் நம்முடன் வருபவர் யுவன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!

லவ் யூ!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?