Kanguva Review: கங்குவா படம் விமர்சனம்.. எகிறிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரிவியூ இதோ!
Kanguva Review in Tamil: கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் இந்த படத்துக்காக தான் சூர்யா ரசிகர்களும் பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் பூர்த்தியானதா என்பதை விமர்சனம் வாயிலாக காணலாம்.
கங்குவா (Kanguva) விமர்சனம்: சுமார் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் நடிகர் சூர்யாவின் கங்குவா படம் ஒருவழியாக தியேட்டரில் வெளியாகியுள்ளது. பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, யோகிபாபு, ரெட்டி கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜ் மிகப்பெரிய பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் இந்த படத்துக்காக தான் சூர்யா ரசிகர்களும் பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் பூர்த்தியானதா என்பதை விமர்சனம் வாயிலாக காணலாம்.
படத்தின் கதை என்ன?
கங்குவாவின் (சூர்யா) கடந்த காலத்தையும், பிரான்சிஸின் (சூர்யா) நிகழ்காலத்தையும் இணைக்கும் கதைக்களமே கங்குவாவின் அடிப்படை தொடக்கமாகும். 2024 காலக்கட்டத்தில் இருக்கும் சூர்யா மற்றும் யோகிபாபு இருவரும் கோவாவில் போலீசார் கூட பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து பரிசு வாங்கும் வேலையைச் செய்கின்றனர். இதனிடையே மனிதர்கள் பற்றி நடக்கும் ஒரு ஆய்வகத்தில் இருந்து தப்பிக்கும் குழந்தையை கோவாவில் சூர்யா சந்திக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதை போல உணர்வு ஏற்படுகிறது.
இதற்கிடையில் ஆய்வகத்தில் இருந்து ஒருவர் திடீரென்று குழந்தையை திரும்ப அழைத்துச் செல்ல வருகிறார். சூர்யா அவர்களுடன் சண்டையிடுகிறார். இதனைத் தொடர்ந்து கதை கி.பி 1070க்கு மாறுகிறது. அந்த குழந்தைக்கும் சூர்யாவுக்கு என்ன தொடர்பு? சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின தலைவர் கங்குவா யார்? எப்படி நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது என்பதே கங்குவாவின் மீதிக்கதையாகும்.
Also Read: Kanguva X Review: ‘கங்குவா’ படம் எப்படி இருக்கு? சூப்பரா? சொதப்பலா? ட்விட்டர் விமர்சனம்!
படம் மிரட்டலா?
பெருமாச்சி தீவின் இளவரசனாக வரும் கங்குவாவுக்கும், அவரின் இனத்திற்கும் போர் தான் குலத்தொழில். அந்த தீவை கைப்பற்ற ரோமானியர்கள் ஒரு பக்கம், உத்திரன் (பாபி தியோல்) தலைமையிலான மற்றொரு குலம் மறுபக்கம் என்று வரும் அந்த கதைக்களம் என பிளாஸ்பேஷ் போர்ஷன்கள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 60% வரலாற்று ரீதியான காட்சிகள் என்ற நிலையில் பணத்தை கொட்டி அதற்கான உழைப்பை சரியாக பெற்றிருக்கிறது படக்குழு.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் லட்சிய முயற்சியான கங்குவா தான் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. கதை சொல்லல் என்ற வார்த்தையை அவர் சரியாக உபயோகித்து இருக்கலாமோ என தோன்றும் அளவுக்கு திரைக்கதை அமைந்துள்ளது. பார்க்க பிரமாண்டம் மட்டுமல்லாது மனதிலும் இடம் பெற காட்சிகளும் இருந்திருக்க வேண்டும். அது கங்குவாவில் மிஸ்ஸிங்.
படத்தின் மையமே சூர்யாவும், பாபி தியோலும் தான். இருவரும் அட்டகாசமான நடிப்பால் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். குறிப்பாக பாபி தியோலை பார்க்கும்போது பார்வையாளராக நமக்கே சற்று கிலி உண்டாவது நிஜம். மற்றபடி திஷா பதானி கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு சரியான காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். மேலும் யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி என பலரும் இருந்து படம் பார்ப்பவர்கள் இது வரலாற்று படம் என எண்ணத்தை வைத்திருப்பதால் எதுவும் எடுபடவில்லை.
ஆக்ஷன், கிராபிக்ஸ், கலை இயக்கம் என இந்த 3 துறையும் கங்குவாவை காட்சியாக பிரமாண்டப்படுத்தி விட்டது. கண்டிப்பாக கங்குவா உலகத்தை பார்க்கும் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார்கள். சரியாக இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுத்து முடித்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழுக்கு வந்துள்ளார். பாடல்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் பின்னணி இசையில் ஆங்காங்கே தெறிக்கவிட்டுள்ளார். வெற்றியின் கேமராவும் தன் பங்குங்கு அசத்தியிருக்கும் நிலையில் சுவாரஸ்யமில்லாமல் கதை சொல்லுகிறாரோ என தோன்று அளவுக்கு திரைக்கதை பலவீனமாக உள்ளது. விஷூவலாக பார்க்கப்போனால் அனைவருக்கும் கங்குவா ட்ரீட் தான். ஆனால் சாதாரண ரசிகனாக பார்த்தால் சில குறைகள் இருக்கவே செய்கிறது. அதனை இரண்டாம் பாகத்தில் சிவா சரி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.