5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theatre Release Movies: இந்த வாரம் கோலிவுட்டில் வரிசைக்கட்டும் படங்கள்… லிஸ்ட் இதோ

Movie Update: கோலிவுட்டில் செப்டம்பர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் 3-வது வாரமான இந்த வாரம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

Theatre Release Movies: இந்த வாரம் கோலிவுட்டில் வரிசைக்கட்டும் படங்கள்… லிஸ்ட் இதோ
படங்கள் லிஸ்ட் இதோ
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Sep 2024 20:39 PM

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் வருகின்ற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளது ‘நந்தன்’ படம். இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி பெரியசாமி நடித்த இந்தப் படத்தில் மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இசையமைப்பாளராக ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் தோன்றி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இவர் தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.  இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

நடிகர் சத்யராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தோழர் சேகுவேரா’. இந்தப் படத்தை இயக்குனர் அலெக்ஸ் இயக்கியுள்ளார். அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. சத்யராஜுடன் இணைந்து ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம் அலன் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை பி.எஸ் அஷ்வின் அமைத்துள்ளார். திரைப்படம் முன்னதாக மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப்போனது. திரைப்படம் தற்பொழுது வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் நடிகர் காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ள படம் ‘தோனிமா’. சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை  ரோஷ்னி பிரகாஷ் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest News