சினிமா துறை மூலம் கிடைக்கும் பணம்,புகழ் எல்லாம் பிடிக்கும்…கவர்ச்சி பிடிக்காதா? – தமன்னா
தமன்னா அளித்துள்ள பேட்டியில், கவர்ச்சி பாடல்கள் மீதான ரசிகர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த் தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம், பாகுபலி தேவி, தர்மதுரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை தமன்னா சமீபகாலமாக கவர்ச்சியில் எல்லை மீறி நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2′ வெப் தொடரில் படுக்கை அறை காட்சியில் ஆபாசமாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி இருந்தார். தற்போது அரண்மனை 4 நடித்துள்ளார்.
இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், ‘‘பாடல் காட்சிகளில் நான் கவர்ச்சியாக நடிப்பது பற்றி பேசப்படுகிறது. கவர்ச்சி பாடல்கள் மீதான ரசிகர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கவர்ச்சியான பாடல்களில் இருக்கும் சில விஷயங்கள் பற்றி மோசமாக பேசுகின்றனர்.
ஆனால் கவர்ச்சி என்பதை ஒரு கொண்டாட்டமாகவே பார்க்க வேண்டும். கவர்ச்சி பாடல்கள் மூலம் பார்வையாளர்களுடன் எனக்கு பெரிய தொடர்பு கிடைக்கிறது. அந்த பாடலை கேட்டு சிறிய குழந்தையும் ஆடுகிறது. இதுபோன்று நடனம் ஆடுவதும் நடிகையாக இருக்கும் எனது வேலைதான். சினிமா துறை மூலம் கிடைக்கும் பணம் புகழ் எல்லாம் பிடிக்கும் கவர்ச்சி பிடிக்காது என்று சொல்வது சரியல்ல” என்றார்.