தமன்னாதான் பேயா? மிரட்டும் அரண்மனை 4 டிரெய்லர்!
சென்னையில் அரண்மனை-4 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில் படம் அரண்மனை 4. இந்தப் படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ள படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. சென்னையில் நடந்த விழாவில் பாடல் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் இயக்குனர், நடிகர் சுந்தர் சி, நடிகைகள் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இன்று வெளியான டிரெய்லரில் தொடக்கத்திலே அரண்மனை ஒன்றை காண்பிக்கின்றனர். அடுத்து, ஒருவர் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதே தகராறு போல.. காட்டுக்கு போனவரு அங்கேயே இறந்துட்டாரு” என அந்த வசனம் நீள்கிறது. இது தொடர்பான காட்சி அமைப்பில் நீல நிறத்தில் வரும் கை ஒன்று ஒருவரின் கால்களை பிடித்து இழுப்பது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுந்தர் சி தங்கை கிணற்றுக்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொள்கிறார். அவரின் சாவு, தற்கொலை அல்ல என சுந்தர் சி கூறுகிறார்.
அடுத்து சில மர்ம காட்சிகளுடன் படம் நகர்கிறது. பேயை கட்டுப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து திருவிழா தொடர்பான காட்சிகளும், பேயை கட்டுப்படுத்தும் காட்சிகள் என டிரெய்லர் நகர்கிறது.
இறுதியாக காட்டுக்குள் ஒரு உருவத்தை சுந்தர் சி பார்ப்பது போலவும், அடுத்த காட்சியில் யோகி பாபு பயத்தில் இருப்பது போலவும் காட்சிகள் முடிகின்றன.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை முதல் பாகம் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லெட்சுமி ராய், வினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்ற நிலையில், அரண்மனை 2 2016ஆம் ஆண்டு வெளிவந்தது. 2ம் பாகத்தில் திரிஷா, சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அடுத்து 2021ஆம் ஆண்டு அரண்மனை பாகம் 3 வெளியானது. இதில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்சி அகர்வால், ஆண்ட்ரியா, இவர்களுடன் சுந்தர் சி நடித்திருந்தனர்.
இந்தப் படமும் வசூல் ரீதியாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில், அரண்மனை பாகம் 4 படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் ஏப்.11ஆம் தேதி வெளியாகிறது.