5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: தளபதி 69 பூஜை முதல் ரஜினி அறிக்கை வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பூஜை முதல் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தது வரை இன்று அக்டோபர் மாதம் 04-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: தளபதி 69 பூஜை முதல் ரஜினி அறிக்கை வரை… டாப் சினிமா செய்திகள்!
சினிமா செய்திகள்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2024 19:10 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பூஜை முதல் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தது வரை இன்று அக்டோபர் மாதம் 04-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி வரும் 20-ம் தேதி சென்னையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடன இயக்குனர் ஜானிக்கு தேசிய விருது வாங்க இடைக்கால ஜாமீன்

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு தேசிய விருது வாங்க இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜானியை நேற்று போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நடந்த விசாரணையில் ஜானிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்…

நடிகர் விஜய் தனது விரலில் ‘GOAT’ என்று போடப்பட்ட மோதிரத்தை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவது, சுமார் 5 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வெளியிட்ட திடீர் அறிக்கை…

உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நான் மருத்துவமனையில் இருக்கும் போது சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்து மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் அமிதாப் பச்சன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

பூஜையுடன் தொடங்கியது விஜயின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது?

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகருக்கு மறுமணம், வைரலாகும் போட்டோ

சன் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கிய இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள். 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த தொடர் இந்த வருட ஆரம்பத்தில் தான் முடிவுக்கு வந்தது. எதிர்நீச்சல் தொடர் மலையாளத்தில் காணல் பூவு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்நீச்சல் மலையாள தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மறுமணம் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம், அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News