5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: விஜய்யை வாழ்த்திய ரஜினி முதல் அமரனை வாழ்த்திய முதல்வர் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்த ரஜினி முதல் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் வரை அக்டோபர் மாதம் 31-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: விஜய்யை வாழ்த்திய ரஜினி முதல் அமரனை வாழ்த்திய முதல்வர் வரை… டாப் சினிமா செய்திகள்!
சினிமா செய்திகள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Oct 2024 18:34 PM

இன்றைய சினிமா செய்திகள்: அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்த ரஜினி முதல் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் வரை அக்டோபர் மாதம் 31-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

இன்று தீபாவளிக்கு வெளியான 4 படங்கள்

தீபாவளி, பொங்கள் என பெரிய பண்டிகைகள் வரும் போது கோலிவுட் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’, நடிகர் கவினின் ‘ப்ளடி பெக்கர்’, நடிகர் ஜெயம் ரவியின் ‘ப்ரதர்’ ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளது. படங்கள் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி – ரஜினி

தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த சென்னை போஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு இருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அதில், ”அனைவருக்கும் என்னுடைய தீபாவளர் வாழ்த்துகள். அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி  எழுப்பினர்.இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார். மேலும், அவரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பிக்பாஸிற்கு வந்த கவின்… உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 25-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 25-வது நாள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்ப்டுகின்றது. இந்த நிலையில் இதனை கொண்டாடும் வகையிலும், ப்ளடி பெக்கர் படத்தின் புரமோஷன் பணிக்காவும் நடிகர் கவின் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கவின் கடந்த 3-வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘உயிரே’ லிரிக்கள் வீடியோ

அமரன் படத்திலிருந்து லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து’ உயிரே’ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கங்குவா படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படக்குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டருடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கங்குவா படம். இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் 13 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் படம் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் படக்குழுவினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை மைசூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர். இந்நிலையில் காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக போலீஸ் விசாரனையில் தெரியவந்தது. நடிகர் தர்ஷன்  தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரும் ஆவார். கன்னட சினிமாவின் முன்னணி சமகால நடிகர்களில் ஒருவரான, தர்ஷன் 2006 இல் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக தர்ஷனுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

’கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் எப்போது? வெளியானது அப்டேட்!

தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராம்சரண். டோலிவுட் ரசிகர்களால் மெகாஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர் மாவீரா என்ற படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆர்.ஆர்.ஆர். படம் இவரது புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் ராம் சரண். கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்துள்ளனர். ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் படக்குழு பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவனாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் வருகின்ற டிசம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. முகுந்தின் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Latest News