உத்தம வில்லன் பட விவகாரம்.. தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசன் மீது புகார்!

உத்தம வில்லன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மீண்டும் தங்களது தயாரிப்பில் படம் நடித்து தருவதாக சொல்லிய கமல்ஹாசன் இதுவரை செய்து தரவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளது.

உத்தம வில்லன் பட விவகாரம்.. தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசன் மீது புகார்!

கமல்-லிங்குசாமி

Updated On: 

29 Oct 2024 15:15 PM

இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தை தயாரித்து இருந்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனதால் தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம் என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

ஆனந்தம் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக லிங்குசாமி அறிமுகமானார். தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை என பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.

இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பை பெறவில்லை என்று கூறப்பட்ட நிலையில், யூடியூப் சேனலில் உத்தமவில்லன் படம் லாபம் தான் என பிரபல பத்திரிகையாளர் பேசி இருப்பதற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொய் என குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பொய்யான செய்தி பரப்பாதீங்க” உத்தம வில்லன் படம் குறித்து லிங்குசாமி அறிக்கை!

இந்நிலையில், உத்தமவில்லன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒன்பது வருடங்கள் ஆகியும் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் கடிதத்தில், “எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமல்ஹாசன் அவர்களை 2013ஆம் ஆண்டு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக அணுகினோம், கமல்ஹாசன் அவர்கள் சம்மதித்து எங்களிடம் ஒரு கதையை கூறினார் அந்த கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் எங்கள் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு முதல் பிரதி அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படத்தை செய்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது..

என் மனதிற்கு நெருக்கமானதென்றும் அதற்கு “உத்தமவில்லன் தலைப்பு வைத்து அதை தன் நண்பர் ரமேஷ் அரவிந்த் மூலம் இயக்கி தருவதாகவும் தெரிவித்தார். அதில் எதாவது உங்களுக்கு தவறு நடக்கும் பட்சத்தில் படத்தின் நஷ்டத்தை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதியும் அளித்தார். அதை நம்பி நாங்களும் அந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு மீதி தொகையான ரூ.20 கோடியை படத்தின் ஒவ்வொரு ஷூட்டிங் அட்டவணைப்படி எந்தவித் தாமதமின்றி சரியான நேரத்தில் வங்கி மூலமாக பணத்தை கொடுத்து முடித்துவிட்டோம்.

கடன் வாங்கி உத்தமவில்லன்” படத்தை மே 2, 2015 அன்று வெளியிட்டோம். இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்து எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ஓர்இரவு (தூங்காவனம்) படத்தின் ஷூட்டிங் பாதி நிலையை தாண்டிய நிலையில் கமல்ஹாசன் தொலைபேசி அழைப்பின் பேரில் அவரை பேரில் சந்தித்தோம்.

அப்பொழுது கமல்ஹாசன் அவர்கள் நான் உங்களுக்கு ஒரு படம் ரூ.30 கோடியில் செய்து தருவதாக உத்திரவாதம் கொடுத்துள்ளேன் . அதற்கு நீங்கள் இப்பொழுது ஷூட்டிங் நடைபெற்று வரும் ஓர்இரவு (தூங்கா வனம்) படத்தையே எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் இந்த படம் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு எங்களுக்கு கதையில் ஒரு படத்தை செய்து தருமாறு மறுபடியும் கூறிவிட்டு வந்தோம். இதனால் அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின் அடிப்படையில் பலமுறை கமல்ஹாசனை நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டோம்.

ஒன்பது வருடங்கள் கழிந்தும் இதுவரை எங்களுக்கு படம் செய்து தருவதாக கூறியவர் செய்து தரவில்லை. இப்பட வெளியீட்டிற்கு கடன் கொடுத்த அனைவரும் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். எனவே தமது சங்கம் தலையிட்டு கமல்ஹாசன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தரும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!