அன்று அஜித்.. இன்று கமல்ஹாசன்.. பட்டங்களை துறக்கும் நடிகர்கள்.. என்ன காரணம்?

Tamil Cinema: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், தளபதி விஜய், தல அஜித், புரட்சித் தளபதி விஷால் என ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுடைய பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் திகழ்கின்றனர்.

அன்று அஜித்.. இன்று கமல்ஹாசன்.. பட்டங்களை துறக்கும் நடிகர்கள்.. என்ன காரணம்?

கோப்பு புகைப்படம்

Updated On: 

11 Nov 2024 16:25 PM

தமிழ் சினிமா:  உலக நாயகன் என தமிழ் சினிமா அன்போடு அடைமொழியிட்டு அழைத்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னணி காரணம் பற்றி காணலாம். தமிழ் சினிமாவையும் தமிழ்நாட்டு மக்களையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பொழுதுபோக்கு என ஒன்று இருந்தால் அது சினிமா தான் என்ற அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டது தமிழ்நாடு. திரைகள் தோன்றிய மக்கள் மனதில் குடி கொண்டால் நாடாள நினைத்தாலும் ஆளலாம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படாத விதி. அண்ணா தொடங்கி விஜய் வரை அத்தகைய ரசிகர்களாகிய மக்களின் நம்பித்தான் அரசியலில் களம் இறங்கினர். இப்படிப்பட்ட நிலையில் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை அடைமொழி அதாவது பட்டம் கொடுத்து அழைப்பது என்பது தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே அடையாளமாக திகழ்கிறது.

Also Read: ‘உலகநாயகன்’அடைமொழி வேண்டாம்..! நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்!

அடைமொழியுடன் பிரபலங்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், இளைய திலகம் பிரபு, ஆக்ஷன் கிங் அர்ஜுன், இளைய தளபதி, தளபதி விஜய், தல அஜித், புரட்சித் தளபதி விஷால், இளம்புயல் ஜெயம் ரவி, வைகை புயல் வடிவேலு, ஜனங்களின் கலைஞன் விவேக் என ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுடைய பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் திகழ்கின்றனர். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. ஆனால் நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகைகள் அனைவருக்கும் அடைமொழி இருப்பது இல்லை. இவை அனைத்தும் ரசிகர்களாகிய மக்களால் சூட்டப்பட்டு அன்போடு அழைக்கப்படுபவை.

அஜித் எடுத்த அதிரடி முடிவு

இப்படியான நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் திடீரென அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரசிகர்கள் இனிமேல் தன்னை தல மற்றும் வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது அஜித்குமார் மற்றும் அஜித் அல்லது AK என குறிப்பிட்டால் போதுமானது. பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுகிறேன் என தெரிவித்திருந்தார். அஜித்தின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தல, அல்டிமேட் ஸ்டார், மிரட்டல் நாயகன் என பல அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்த அஜித் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு கலைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார். இப்படியான நிலையில் பட்டத்தையும் துறந்தது பாராட்டையும் மறுபுறம் அவரது ரசிகர்களுடைய சோகத்தையும் ஏற்படுத்தியது.

Also Read: பிரதர் படத்திலிருந்து வெளியான “ஸ்னீக் பீக்” வீடியோ!

கமல் வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில் உலக நாயகன் என அன்போடு அழைக்கப்பட்ட கமல்ஹாசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “என் மீது கொண்ட அன்பால் உலகநாயகன் உள்ளிட்ட பல பிரியம் ததும்பும் பட்டங்களை கொண்டு அழைக்கிறீர்கள். சகக் கலைஞர்களாலும், ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படியான பாராட்டு சொற்களால் நான் மகிழ்ந்திருக்கிறேன். நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்கள் பிரியத்தின் மீது மாறாத நன்றி உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.

சினிமா கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் மாணவன் தான் நான். சினிமா என்பது அனைவருக்குமானது. கலையை விட கலைஞன் பெரிது இல்லை என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை ஆகும். அதனால் நிறைய யோசனைக்கு பிறகு உலகநாயகன் உள்ளிட்டை எந்த பட்டங்களாலும், அடைமொழிகளாலும் இனி என்னை அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன். என்னை கமல்ஹாசன், கமல், KH என்று குறிப்பிட்டால் போதுமானது என தெரிவித்தார். சினிமாவை நேசிக்கும் அனைவரில் ஒருவராகவும், சக மனிதன் என்ற ஸ்தானத்திலிருந்தும் இந்த முடிவை எடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பட்டங்களை துறக்க என்ன காரணம்?

அன்பின்பால் அழைக்கப்படுவது அடைமொழி என்றாலும், அதுவே பின்னாளில் பல எதிர்பாராத சம்பவங்களுக்கும் காரணமாகி விடுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வளர்ந்து விட்ட பிறகு இதுபோன்ற அடைமொழிக்காக அடித்துக் கொள்ளக்கூடிய ரசிகர்களும், இணையவாசிகளும் உள்ளனர். பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு முதலில் குடும்பம், பணி, பின்பு தான் சினிமா என அறிவுரை வழங்கினாலும் யாரும் கேட்பதாக இல்லை. ஒரு பிரபலத்தின் ரசிகன், மற்றொரு பிரபலத்தின் ரசிகனையும் மதிக்க வேண்டும். அனைத்து சினிமா படங்களும் அனைவருக்குமானது. கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு என்ற போர்வையில் ரசிகர்களை ஒரு கட்டுக்கோப்பில் வைக்க நிச்சயம் இதுபோன்ற சின்ன சின்ன நடவடிக்கைக்கள் உதவும் என திரைத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!