மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் பலி.. கேரளாவில் தொடரும் உயிரிழப்புகள்!
Brain Eating Amoebae | கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மூவரும் ஏரி, குளங்களில் குளித்த நிலையில், தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மூவரும் உயிரிழந்தனர்.
மூளையைத் தின்னும் அமீபா : கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், குளத்தில் குளித்த பிறகு அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதலில் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்ஷினா, மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி உயிரிழந்தார். தாக்ஷினா மூணாறுக்கு சுற்றுலா சென்று, அங்கு நீச்சல் குளித்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா கடந்த மே 1 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் உறவினர்களுடன் குளித்துள்ளார். இதனால் மே 10 ஆம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மூளையை தின்னும் அமீபா என்ன செய்யும்
மூளையை தின்னும் அமீபா மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொற்று ஏற்பட்ட 100%-ல் 97% பேர் உயிரிழந்துவிடுவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்படு தடுப்பிக்கான மையம் கூறுகிறது.
இதையும் படிங்க : Hooch Tragedy: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் தர முடியும் ? அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
அறிகுறிகள் என்ன?
- தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை மூளையை தின்னும் அமீபா தொற்றின் முதன்மை அறிகுறிகள் ஆகும்.
- இந்த அவகை அமீபாக்கள் வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறிகள் ஏற்பட்ட 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர்.
- இந்த அமீபா நமது உடலில் வளர தொடங்கும் போது கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த தொற்று மிகவும் அறிதானது என்பதால் இதனை சோதனை மூலம் கண்டறிவது மிகவும் சவாலானதாக உள்ளது.
- அதிலும் குறிப்பாக இந்த நோயால் உயிரிழந்த பிறகு தான் அந்த நபர் இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.