400 ஆண்டுகள் பழமை.. 46 ஆண்டுகளாக பூஜை இல்லை.. முருகர், பார்வதி, சிவன் சிலை மீட்பு!
400 year old temple found: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் 400 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்தக் கோவிலில் பார்வதி, விநாயகர் மற்றும் கார்த்திகேயா (முருகன்) சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
400 ஆண்டுகள் பழமையான கோவில் மீட்பு: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பாலில் திறக்கப்பட்ட புராதன பஸ்ம சங்கர் கோவிலில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 2024) காலை காண்பிக்கப்பட்டது. இந்தக் கோவிலில் சிவ லிங்கம் மற்றும் ஹனுமன் உள்ளிட்ட சிலைகள் இருந்த பகுதி ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்தக் கோவில் ரஷ்தோகி சமூகத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 400-500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படும் இக்கோவில், 1978 கலவரத்துக்கு பின்னர் மூடப்பட்டது என்றும் ரஷ்தோகி கூறினார்.
கைவிடப்பட்ட கோவில்
தொடர்ந்து, கோவில் குறித்த தகவல்களை நாகர் இந்து சபா தலைவர் விஷ்ணு சரண் ரஷ்தோகி செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அப்போது, “இப்பகுதியில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து, கோவிலில் பூஜை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் 1978ல் கலவரம் நடந்தது. கலவரத்துக்கு பின்னர், கோவிலை சுற்றி இருந்த இந்துக் குடும்பங்கள் வெளியேறின.
46 ஆண்டுகள் பூஜை இல்லை
அதன் பின்னர் கோவில் கைவிடப்பட்டது. பூஜைகள் நடைபெறவில்லை” என்றார். அதாவது, 1978 கலவரத்துக்கு பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெறவில்லை.
இந்தக் கோவில், கடந்த மாதம் சம்பாலில் வன்முறை வெடித்த ஷாஹி ஜமா மசூதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கக்கு சராய் பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், காலை பூஜை மற்றும் ஆரத்தியை முன்னிட்டு கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
மேலும், கோவிலில் பூஜைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கோவிலை சுற்றி சில ஆக்கிரமிப்பு கட்டடங்கள் உள்ளன.
அந்தக் கட்டடங்கள் விரைவில் அகற்றப்படும்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன” என்றார். கோவில் பூஜையில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் கூறுகையில், “இந்தக் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. கோவிலில் இன்றுதான் பூஜைகள் நடைபெற்றன. இக்கோவில் சிவன் மற்றும் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது” என்றார்.
சம்பல் சச்சரவு
அண்மையில் சம்பலில் உள்ள மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 5க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 20க்கும் மேற்பட்ட போலீசார் தாக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மசூதிகளில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும். வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துன.
ராஜஸ்தான் மசூதி சர்ச்சை
இதற்கிடையில் டெல்லி ஜாமியா மசூதி, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுவும், தொல்லியல் துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டன.
ராஜஸ்தான் தர்கா தொடர்பான சர்ச்சையில் இந்து அமைப்புகள் அதனை பாரம்பரியமிக்க சிவன் கோவில் என வாதிட்டன. இந்தக் கூற்றை இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டமாக நிராகரித்தன.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மாநில அமைச்சர் ஜவஹர் சிங் பேதம், “நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி ஜாமியா மசூதியில் ஆய்வு தேவை.. புதிய மனுவால் பரபரப்பு!