Watch Video: கொட்டிய கனமழை.. பைக்கோடு சாலையில் அடித்துச்செல்லப்பட்ட நபர்!
ஹைதராபாத் பகுதியில் சாலைகள் ஏற்றம், இறக்கமாகவே இருக்கும். இதனால் மழை பெய்தால் தண்ணீர் இறக்கமான பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். இப்படியான நிலையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்போது அதனை எதிர்த்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற நபர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெலங்கானா: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொட்டிய கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். குறிப்பாக வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே மலைப்பகுதிகளால் சூழப்பட்ட ஹைதராபாத் பகுதியில் சாலைகள் ஏற்றம், இறக்கமாகவே இருக்கும். இதனால் மழை பெய்தால் தண்ணீர் இறக்கமான பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். இப்படியான நிலையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்போது அதனை எதிர்த்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற நபர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலையில் சென்றவர் பைக்கோடு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி #Hyderabad #Flood pic.twitter.com/OpYeuNWEip
— velmurugan (@velmurugantheni) August 20, 2024
இந்த சம்பவம் ஹைதராபாத்தின் ராம் நகரில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவரை சாலையில் மறுபுறம் நின்றுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் ஓடிச் சென்று மீட்க முயன்றனர், ஆனால் தண்ணீரின் வேகம் அந்த இரு இளைஞர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்றது. சுதாரித்த அவர்கள் தப்பிய நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஹைதராபாத் போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Budget Smartphones : ரெட்மி முதல் ரியல்மி வரை.. ரூ.15,000-க்குள் கிடைக்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
கனமழையால் நகரின் பல பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், வெள்ளப்பெருக்கின் வேகம் அதிகமாக இருப்பதால் யாரும் வெளியே வந்து வேடிக்கை பார்க்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் மாற்று வழிகளில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவைப் பொறுத்தவரை அதிகப்பட்சமாக புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் சுமார் 17 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் நாராயண்பேட்டை மாவட்டம் மத்தூரில் 14 செ.மீ மழையும் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Omni Bus Theft: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் அசால்ட்டாக திருடிய இளைஞர்!
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 8.30 மணி வரை தெலங்கானாவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தெலங்கானா அரசும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.