Railway Ticket Booking: நண்பர்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறையா? எது உண்மை.. விளக்கிய ஐஆர்சிடிசி!
IRCTC Ticket Booking: கடந்த சில நாட்களாக உங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தகவல்கள் இணையத்தில் உலாவியது. இந்த நிலையில், இதற்கு ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஐஆர்சிடிசி தளம் மூலம் நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறையா? நாட்டில் மிக முக்கியமான அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கக்கூடிய பொது போக்குவரத்தாக ரயில் சேவை இருக்கிறது. ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறைந்தது சில வாரங்களுக்கு முன்பாவது டிக்கெட் புக் செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், புத்தாணடு என பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. இதனால், ரயிலில் பயணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்வது கட்டாயமாகிறது. இதற்கு ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த ஐஆர்சிடிசி கணக்கு அனைவரிடமும் இருக்காது. இதனால், நண்பர்களை பலரும் டிக்கெட் போடச் சொல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், கடந்த சில நாட்களாக உங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தகவல்கள் இணையத்தில் உலாவியது.
Also Read: பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்.. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு..!
அதாவது, தனிப்பட்ட கணக்கை பயன்படுத்தி குறிப்பிட்ட அந்த நபர் தாங்கள் பயணிக்க டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு டிக்கெட் புக் செய்து தரலாம். ஆனால், நண்பர்கள், மற்றவர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வெளி வந்தன. அதாவது, ரூ.10,000 அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகின. இதனால், நண்பர்கள், உறவினர்கள் மூலம் ரயில் டிக்கெட் எடுத்து வந்தனர் அதிருப்தி அடைந்தனர். இதற்கு உரிய விளக்கத்தை ரயில்வே நிர்வாகம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
உண்மை என்ன?
The news in circulation on social media about restriction in booking of e-tickets due to different surname is false and misleading. pic.twitter.com/xu3Q7uEWbX
— IRCTC (@IRCTCofficial) June 25, 2024
இந்த நிலையில், இதற்கு ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ஐஆர்சிடிசி தளம் மூலம் நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால் மாதத்திற்கு 24 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, டிக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்றால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 143 கீழ் குற்றமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கைப்பிடித்து கூட்டிப்போன மோடி, ராகுல் காந்தி.. மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா!