“என் தந்தையை வீட்டுக்கு துண்டு துண்டாகக் கொண்டு வந்தேன்” பிரியங்கா காந்தி வேதனை
குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்.
குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்.
மக்களவை தேர்தல்:
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று நடைபெற்று முடிந்தது.
இதில் பாஜகவின் கோட்டையாக பார்க்கப்படும் குஜராத்தில் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டாக வாக்குப்பவு நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பிரியங்கா காந்தி வேதனை:
இந்த நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். வல்சாட் தரம்பபூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருவாக்கமாக பேசினார்.
”எனது குடும்பத்தில் மட்டுமில்லை. பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். அதில், இந்திரா காந்தி ஒருவர். அவர் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்திருக்கிறார். ராஜீவ் காந்தியும் ஒரு பிரதமர்தான். அவரை நான் துண்டு துண்டாக வீட்டிற்கு எடுத்து வந்தேன். அவர் தனது நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார்.
இந்த நாட்டில் மன்மோகன் சிங் புரட்சியை கொண்டு வந்தார். காங்கிரஸ் மட்டுமல்ல. குறைந்தபட்சம் நாகரீகமான மனிதராக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்தார். உங்களிடம் இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் மோடி தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.
உங்களைச் சந்திக்க பிரதமர் மோடி வரவில்லை. இப்படி இருப்பவர் மக்களின் பிரச்னைகளை எவ்வாறு அறிந்து கொள்வார்? உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உங்களை சந்திக்க வருவார்கள்? சிறுவயதில் நான் அவர் பின்னால் நடந்து செல்வேன்.
பாஜக தலைவர்களும் வேட்பாளர்களும் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களின் தந்திரம். முதலாவதாக, அவர்கள் செய்ய விரும்புவதை அவர்கள் எப்போதும் மறுப்பார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை அமல்படுத்துவார்கள்” என்றார்.