Tirupati: திருப்பதி பிரம்மோற்சவம்.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் ஒவ்வொரு மாலை வேளைகளிலும் ஏழுமலையான் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வருவார். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா..கோவிந்தா.. என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்வையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகின் 2வது பணக்கார கடவுளாக கருதப்படுகிறது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என நம்பப்படுவதால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். இதனிடையே திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா நாளை நிறைவடைகிறது.
Live: Radhotsavam || Annual Brahmotsavams, October 11, 2024 || Tirumala#TTD #TTDevasthanams #Radhotsavam #AnnualBrahmotsavam2024 #Tirumala #TTDMobileApp
Facebook:https://t.co/CofxRTvP5j pic.twitter.com/uYmIFzU8dV
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) October 11, 2024
இந்த திருவிழா நாட்களில் மலையப்ப சுவாமி காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். காலையில் 8 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 7 மணி முதல் 9 மணி வரையும் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவது வழக்கம். கருட வாகன சேவை மட்டும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வருகை தருவது வழக்கம் என்பதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நடப்பாண்டு கருட சேவை தரிசனத்துக்கு மட்டும் ரூ.300 மதிப்புள்ள சுமார் 1.32 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Also Read: Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!
பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் வருகை தந்தார். தொடர்ந்து ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின்மீது சுமந்து வந்து அர்ச்சகரிடம் கொடுத்தார். பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்த அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். இதனையடுத்து முதல் நாள் நிகழ்வில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவரான மலையப்பர் ஆதிசேஷனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2ம் நாளான அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி சனிக்கிழமையில் காலை வாசுகி என சொல்லப்படும் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலையில் அன்ன வாகனத்தில் வீதியுலா வந்தார்.
Also Read: Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
அக்டோபர் 6 ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்து பல்லக்கிலும் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அக்டோபர் 7 ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்திலும் 4 மாட வீதிகளிலும் வலம் வந்தார். திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி காலையில் மோகினி அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளினார். பின்னர் மாலையில் 6.30 மணிக்கு கருட வாகன சேவை தொடங்கியது. இரவு 11 மணி வரை நடந்த கருட வாகன சேவை நடைபெற்ற நிலையில் இதில் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.