Cyclone Dana: வேரோடு சாய்ந்த மரங்கள்.. கரையை கடந்தது டானா புயல்.. ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை!
புயல் கரையைக் கடக்கும்போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் ஆங்காங்கே வேருடன் சாய்ந்தது. இந்த டானா புயலால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் மற்றும் மேற்கு வங்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளதால் மழையின் அளவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டானா புயல்: ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய டானா புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது நள்ளிரவு 12.10 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா இடையே கரையைக் கடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர கிராமங்களில் கனமழைக் கொட்டித் தீர்த்தது. புயல் கரையைக் கடக்கும்போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் ஆங்காங்கே வேருடன் சாய்ந்தது. இந்த டானா புயலால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் மற்றும் மேற்கு வங்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளதால் மழையின் அளவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்க தொடங்கிய ஆறு மணி நேரத்திற்கு முன் 15 கி.மீ., வேகத்தில் வீசத் தொடங்கிய காற்று, புயல் கரையை கடக்கும் நேரத்தில் 110 கி.மீ., வரை வீசியது. முன்னதாக பாலசோர், பத்ரக், கேந்த்ராபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 4,17,626 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அதேசமயம் மேற்கு வங்கத்தில் உள்ள நிவாரண முகாம்களில் 2,43,374 பேர் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மாநில அரசு மூலம் வழங்கப்பட்டது.
Also Read: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு!
டானா புயல்
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் இது ஒரிசா, மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று அக்டோபர் 24 ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெற்றது.
இதனால் ஒரிசா, மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தீவிர புயலானது வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே 24ஆம் தேதி இரவு தொடங்கி 25ஆம் தேதி அதிகாலை நேரத்திற்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அந்த நேரத்தில் இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு டானா என பெயர் சூட்டப்பட்டிருந்தது. கத்தார் நாடு பெயரை தேர்வு செய்த நிலையில் இதற்கு அழகு, காற்று என அர்த்தம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
டானா புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் முன்னெச்சரிக்கையாக 15 மணி நேரம் விமான சேவைகளை நிறுத்தி வைத்தது. அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 9 மணி வரை விமான நிலைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வானிலை நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் ஒடிசாவில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 16 மணி நேரம் விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் வழக்கம்போல சேவைகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாநிலங்களில் இருந்து ஒடிசா, மேற்குவங்கம் செல்லும் 28 ரயில்களின் சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் வலுவிழந்த பிறகு கனமழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீட்பு பணிகள் முழுவீச்சில் தொடரும் என இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளது.