சஸ்பென்ஸ் ஓவர்.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
Maharashtra CM Devendra Fadnavis: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்கவுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வரை மகாயுதி கூட்டணி தேர்வு செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்கவுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வாகி உள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகாராஷ்ராவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில், ஆளும் பாஜக கூட்டணி 235 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் பாஜக 132 இங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றாலும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது.
மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றாலும் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த முறை உத்தவ் தலைமையிலான ஒன்றுபட்ட சிவசேனாவை பிளவுபடுத்தியதால் பாஜக கூட்டணி அரசில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
எனவே, பீகாரில் இருப்பது போன்று இந்தமுறை தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தினார். ஆனால், இந்த முறை பாஜக தனிப்பெருங்கட்சியாக வென்றுள்ள நிலையில், முதல்வர் பதவியை தன்வசம் வைக்க முடிவு செய்தது.
அதன்படி, கடந்த முறை துணை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக தேர்வு செய்ய முடிவெடுத்தது. அதன்படி, இன்று நடந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வாகி உள்ளார். பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
Official invitation card of swearing-in ceremony with Devendra Fadnavis mentioned as Chief Minister of Maharashtra released by state government.
(Pic: Team of Devendra Fadnavis) pic.twitter.com/WPCtLIjJye
— ANI (@ANI) December 4, 2024
மும்பை விதான் பவனில் இந்த கூட்டம் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பார்வையாளர்களாக இருந்தனர். அப்போது மகாராஷ்ரா சட்டப்பேரவை தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸை தேர்வாகினார். இதனை அடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு மகாயுதி கூட்டணிக் கட்சி ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக பாஜகவின் மகாராஷ்டிரா பிரிவுத் தலைவர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்தார்.
இதன்பிறகு, தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “நீங்கள் அனைவரும் என்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. எங்கள் மத்திய பார்வையாளர்களான விஜய் ரூபானி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி. இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியும். வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். ஹரியானாவுடன் எங்கள் தொடர் வெற்றிகளை நாங்கள் மீண்டும் தொடங்கினோம்.
Also Read : பதற்றம்.. பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு.. சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
நாளை பதவியேற்பு விழா
இப்போது மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு நான் முற்றிலும் தலைவணங்னுகிறன். முதல்வர் ஏக்நாத் ஷிட்னே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த சில நாட்களில் நம் விருப்பத்திற்கு ஏற்ற விஷயங்கள் நடக்கும், சில விஷயங்கள் நமக்கு எதிராக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் நாம் அனைவரும் மாநிலம் மற்றும் நாட்டின் பெரிய நலனுக்காக உழைக்க வேண்டும், இறுதியில், மகாராஷ்டிராவின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முயற்சிப்போம்” என்றார். மகாராஷ்டிரா முதல்வராக தேர்வான ஃபட்னாவிஸ் டிசம்பர் 5ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கண்காணித்து வருகிறார்.
Also Read : தெலங்கானாவில் திடீர் நிலநிடுக்கம்.. பதறிய மக்கள்.. நடந்தது என்ன?
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், பதவியேற்பு விழாவில் துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்பார்கள் என்று கூறப்படுகீறது. இதையடுத்து, வரும் டிசம்பர் 7,9ஆம் தேதிகளில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.