Union Budget 2024: 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல்.. தீவிர ஆலோசனையில் நிர்மலா சீதாராமன்..
Budget 2024: பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள், நிதி மற்றும் மூலதன சந்தை வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளை நடத்த ஜூன் மாத இறுதியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
யூனியன் பட்ஜெட் 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்கிறார். ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் யூனியன் பட்ஜெட் 2024-2025 ஜூலை 23 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் பல ‘வரலாற்று’ நடவடிக்கைகளாக குறிக்கப்படும் என்றும் ‘முக்கிய சமூக மற்றும் பொருளாதார தீர்மானங்களை’ கொண்டு வரும் என்றும் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஜூன் 24 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெற்ற 18வது மக்களவையின் முதல் அமர்வில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு, நாடாளுமன்றத்தின் முதல் முழு அமர்வு இதுவே ஆகும்.
Also Read: 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.. தலைநகர் சென்னையில் எப்படி?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எவ்வாறாயினும், நீட்-யுஜி தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சி மற்றும் அரசு இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு மத்தியில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் பரபரப்பாக தொடங்கியது. பிரதமர் மோடி தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் ‘ புதிய அத்தியாயங்களை எழுதுவது’ பற்றி கூறியதன் வெளிச்சத்தில் வரவிருக்கும் பட்ஜெட் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆகக் குறைத்தார். பழைய மற்றும் புதிய ஆட்சியில் வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள், நிதி மற்றும் மூலதன சந்தை வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளை நடத்த ஜூன் மாத இறுதியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.