5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana Election: ஹரியானாவில் தொடங்கியது வாக்குப்பதிவு.. 90 தொகுதிகள், 1031 வேட்பாளர்கள்.. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

ஹரியானாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1031 வேட்பாளர்களின் தலைவிதி இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Haryana Election: ஹரியானாவில் தொடங்கியது வாக்குப்பதிவு.. 90 தொகுதிகள், 1031 வேட்பாளர்கள்.. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 05 Oct 2024 08:18 AM

ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1031 வேட்பாளர்களின் தலைவிதி இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தனது 10 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் களமிறங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 ஆகும். இதில் 8,821 வாக்காளர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். இத்தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேசட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சைகள் உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 20,632 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.


இன்று நடைபெறும் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அனைவரும் வாக்களிக்குமாறு பதிவிட்டுள்ளார். அதில், “ ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் மாநிலத்தின் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?

இந்த தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தனித்து களத்தில் உள்ளன. இந்திய தேசிய லோக் தளம் மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து களம் கான்கிறது. அதே நேரத்தில், மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், சந்திரசேகரின் ஆசாத் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.க,வுடன் இணைந்து ஆட்சியை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் நான்கு பேரணிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றினார், அங்கு அவர் பல பிரச்சினைகளில் காங்கிரஸைத் தாக்கினார், மேலும் ராமர் கோயில் பிரச்சினை உட்பட நாட்டுக்கு முக்கியமான ஒவ்வொரு பிரச்சினையையும் காங்கிரஸ் சிக்கலாக்கியுள்ளது என குறிப்பிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டார். காங்கிரஸின் நரம்புகளில் ஊழல் ஓடுகிறது என்று பிரதமர் கூறினார். இந்த கட்சி, தரகர்கள் மற்றும் மருமகன்களின் கட்சியாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி தாக்குதல்.. 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான வியாழன் அன்று, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நுஹ் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசுகையில், பாஜக அரசை தாக்கி பேசியதுடன், கடந்த ஆண்டுதான் மாநிலத்தில் அதிக வன்முறைகள் காணப்பட்டன என்றும், மோடி அரசு அரசியல் சாசனத்தை தாக்கி வருவதாக குற்றம் சாட்டியும், வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிவீர், யோஜனா, விவசாயிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விமர்சித்தார்.

ஹரியானா தேர்தலில் இதுபோன்ற பல இடங்கள் ஹாட் சீட் என்று அழைக்கப்படுகின்றன. இதில், அனைவரின் பார்வையும் கர்ஹி சாம்ப்லா கிலோய், லட்வா, ஜூலானா, அம்பாலா கான்ட் மற்றும் ஹிசார் மீது பதிந்துள்ளது. கர்ஹி சப்லா கிலோய் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் பூபேந்திர சிங் ஹூடா போட்டியிடுகிறார். இங்கிருந்து பலமுறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை லத்வா தொகுதியில் பாஜக முதல்வர் நயாப் சிங் சைனியை களமிறக்கியுள்ளது.

அதேசமயம், ஜூலானா தொகுதியில் வினேஷ் போகட்டுக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கியது. அனில் விஜ் அம்பாலா கான்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அவர் இந்த தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். மனோகர் லால் கட்டார் அரசில் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். நாட்டின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக டாக்டர் கமல் குப்தாவை பாஜக களமிறக்கியுள்ளது. கமல் குப்தா இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரஸில் இருந்து ராம்நிவாஸ் ராதாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுடன் ஹரியானா தேர்தல் முடிவுகளும் அக்டோபர் 8ம் தேதி வெளியாகும். ஜம்மு காஷ்மீரின் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், இரு மாநிலங்களின் முடிவுகள் ஒரே நேரத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது, ஆனால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, ஹரியானாவில் வாக்குப்பதிவு தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

Latest News