Jammu Kashmir Election: காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்! - Tamil News | National Conference chief Farooq Abdullah says Omar Abdullah will become the CM in Jammu Kashmir | TV9 Tamil

Jammu Kashmir Election: காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வெற்றி கொண்டாட்டங்களுக்கு நடுவே ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் எங்களுக்குத் தங்கள் ஆட்சியமைக்கும் உரிமையை வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.  இங்கு காவல்துறையினரின் ஆட்சி இருக்காது” என தெரிவித்துள்ளார்.

Jammu Kashmir Election: காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

08 Oct 2024 15:10 PM

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பலத்தைப் பெற்றுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக ஆகியவை தனித்தும் போட்டியிட்டது. 20 மையங்களில் 12 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. ஆரம்பம் முதலே காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 45 தொகுதிகள் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகித்தது.

இதனால் தேசிய மாநாட்டு கட்சி , காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்து பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதனிடையே  தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வெற்றி கொண்டாட்டங்களுக்கு நடுவே ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் எங்களுக்குத் தங்கள் ஆட்சியமைக்கும் உரிமையை வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.  இங்கு காவல்துறையினரின் ஆட்சி இருக்காது. மக்களுக்கான ஆட்சி நடக்கும். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்வோம்.

Also Read: Haryana Election Result: ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? இந்த 4 விஷயம் ரொம்ப முக்கியம்!

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க முயற்சிப்போம். இங்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகள் எங்களுடன் போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன். எங்கள் கூட்டணியில் இருந்து உமர் அப்துல்லா முதல்வராக வருவார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என சொன்னார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தமளிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் இடையேயான உள்கட்சி பூசல்களால் இது நடந்தது என்று நினைக்கிறேன்” என்று ஹரியானாவில் காங்கிரஸின் செயல்பாடு குறித்து ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடையே பேசிய உமர் அப்துல்லா, “முழு முடிவு இன்னும் வரவில்லை, அதன் பிறகு இதைப் பற்றி பேசுவோம்.  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எங்கள் எதிர்பார்ப்புகளை விட இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும் இந்த வாக்குகளுக்கு மதிப்புள்ளது என்பதை நிரூபிக்கும்” என கூறியுள்ளார்.

தோல்வி குறித்து மெகபூபா முப்ஃதி கருத்து

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, “காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளின் சிறப்பான செயல்பாட்டிற்காக நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிலையான ஆட்சிக்கு வாக்களித்த ஜம்மு காஷ்மீர் மக்களையும் வாழ்த்துகிறேன். ஒரு நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!