Wayanad Landslide: கிளி கொடுத்த நிலச்சரிவு எச்சரிக்கை.. தப்பித்த பல உயிர்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் ஒரு நாளுக்கு முன், காலனி சாலையில் உள்ள தனது சகோதரி நந்தா வீட்டிற்கு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். அவருடன் தங்கள் செல்லப் பிராணியான கிங்கினியையும் உடன் அழைத்துச் சென்றனர். அப்போது அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தனது கிளி நிலச்சரிவு குறித்து எச்சரிக்கை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
முண்டக்கை: பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து மனிதர்களை எச்சரிக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சமீபத்தில் நிலச்சரிவில் அழிந்துபோன வயநாட்டில் உள்ள சூரல்மாலாவில் வசிக்கும் கே.எம்.வினோத் என்பவருக்கு இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. ‘கிங்கினி’ என்ற அவரது செல்ல கிளி, வரவிருக்கும் பேரழிவைப் பற்றி எச்சரிக்கை விடுத்தது. இதனைதொடர்ந்து வினோத் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் ஒரு நாளுக்கு முன், காலனி சாலையில் உள்ள தனது சகோதரி நந்தா வீட்டிற்கு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். அவருடன் தங்கள் செல்லப் பிராணியான கிங்கினியையும் உடன் அழைத்துச் சென்றனர். அப்போது அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தனது கிளி நிலச்சரிவு குறித்து எச்சரிக்கை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்ட நாளன்று, அதிகாலையில், கிங்கினி அதன் கூண்டுக்குள் ஒரு சலசலப்பை உருவாக்க ஆரம்பித்தது. கிளி சத்தமாக கத்தத் தொடங்கியது. இது வழக்கத்திற்கு மாறாக இருந்தது. மேலும் கூண்டுக்குள் தனது சிறகை விரித்து வினோதமான முறையில் அங்கும் இங்கும் வட்டமடிக்க தொடங்கியது. சூரல்மாலாவின் நிலைமையை நான் அறிந்ததால், நான் உடனடியாக என் பக்கத்து வீட்டுக்காரர்களான ஜிஜின், பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோருக்கு போன் செய்தேன். அவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர், அவர்களை எழுப்பி நான் நடந்ததை கூறினேன்.
மேலும் படிக்க: போலியாக பேராசிரியர் கணக்கு காட்டிய கல்லூரிகள்.. இரண்டு நாட்களில் நடவடிக்கை – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..
உடனடியாக அவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தப்போது, மண் கலந்த சேற்று நீர் ஓடுவதை கண்டனர். இதனை கண்டு உஷாரான குடும்பத்தினர், விரைவாக வீட்டை விட்டு அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்,” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் வீடுகள் முற்றிலுமாக இடிந்து மண்ணுக்குள் புதைந்து போனது. அதேசமயம் பிரசாந்த் மற்றும் அஷ்கர் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஆவேசம்’… ரங்காவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வயநாட்டில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு மலையே மண்ணுக்குள் புதைந்துள்ளது. சுமார் ஒரு வார காலமாகியும் இன்னும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலரது உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க நிலச்சரிவில் இருந்து கிடைப்பெற்ற உடல் பாகங்கள் யாருடையது என்று தெரியாமல், டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்திற்கு நடுவே ஒரு கிளியின் எச்சரிக்கையால் பலரது குடும்பம் காப்பாற்றப்பட்டுள்ளது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.