“உயிரோடு இருக்கிற வரை முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது” – பிரதமர் மோடி பேச்சு
நான் உயிருடன் இருக்கும்வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
”மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது”
முதல் மற்றும் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி நேற்று தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை அடுத்து, ஜஹீராபாத் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ” நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விடமாட்டேன்.
2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்கியது. தெலங்கானாவில் 26 பிரிவினர்கள் நீண்ட காலமாக ஓபிசி அந்தஸ்து கோரி வந்தனர். ஆனால், அதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
”நேருவும் அரசியலமைப்பை அவமதித்தார்”
ஒரே இரவில் இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அரசியலமைப்பை அவமதித்து வந்தது காங்கிரஸ். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பை நசுக்கி, நாட்டில் அவசரநிலையை விதித்து, நாட்டில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்தார்.
ஜவஹர்லால் நேருவும் அரசியலமைப்பை அவமதித்தார். அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நேருவால் செய்யப்பட்டது. இந்திரா காந்தியும் அவமதித்தார். எனவே, நாட்டில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அரசு குடும்பத்தைப் பொறுத்தவரை, அதிகாரம் அவர்களுடன் இருக்கும்போது எல்லாம் இருக்கும். ஆனால், அவர்கள் அதிகாரத்தை இழக்கும் போது எதற்கும் மதிப்பில்லாமல்போகும். வாக்கு வங்கியை வலுப்படுத்த நேர்மையற்ற முறையில் இடஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி ராஜஸ்தான் பரப்புரையில் பேசிய கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இஸ்லாமியர்கள் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை இப்படி இழக்க யார் தயாராக இருப்பார்கள். இது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது” என்று பேசியிருந்தார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெறுப்பை தூண்டும் பேச்சு என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.