PM Modi Swearing in Ceremony: 3வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கும் மோடி.. டெல்லியில் குவிந்த உலக தலைவர்கள்!
3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கும் மோடி: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைப் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்தது. 240 இடங்களுட்ன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனை அடுத்து, மோடியே மீண்டும் பிரதமராக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். என்டிஏ தலைவராக மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, என்டிஏ எம்.பிக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, நாட்டின் புதிய பிரதமதராக மோடியை நியமித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பதவியேற்பு விழாவின் அதிகாரப்பூர்வ நேரம் இரவு 7.15 முதல் 8 மணி வரை, அதாவது 45 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: மோடியுடன் இன்று பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்த துறை?
உச்சகட்ட பாதுகாப்பு:
புதிய அரசு பதவியேற்பு விழாவில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது, குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், பாரா கிளைடர்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள் பங்கேற்பு:
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள நாட்டு பிரதமர் புஷ்ப கமல் கஹல், பூடான் பிரதமர் டிஷரிங் டொபேய், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் முகமது முஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்லில் முய்சு வென்றது முதலே இந்தியா-மாலத்தீவு இடையே நிலவி வந்த சுமூகமான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பதவியேற்பு விழாவிற்கு அதிபர் முகமது முஸ்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மோடி. கடந்த 2019 ஆண்டில் BIMSTEC நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையல், இந்தாண்டு அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அழைப்பு என்பது விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்!