Priyanka Gandhi First Speech: ”ஒருவருக்காகவே இங்கு புதிய சட்டங்கள்” – முதல் உரையில் பிரியங்கா காந்தி சரவெடி!

Parliament Winter Session: கேரளாவின் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அரசியலமைப்பு தின விவாதத்திற்கு பிரியங்கா காந்தியின் பெயரை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தவுடன், ராகுல் காந்தி மேசையை தட்டி உற்சாகப்படுத்தினார்.

Priyanka Gandhi First Speech: ”ஒருவருக்காகவே இங்கு புதிய சட்டங்கள்” - முதல் உரையில் பிரியங்கா காந்தி சரவெடி!

பிரியங்கா காந்தி (Image: PTI)

Updated On: 

13 Dec 2024 16:31 PM

மக்களவையில் அரசியலமைப்பு மீதான விவாதத்தின்போது இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஆளும் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ஜவஹர்லால் நேரு குறித்த ராஜ்நாத் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, “ முழு தவறுகளும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது சுமத்தப்படுகிறது, நீங்கள் ஏன் தற்போதையதை பெற்றி பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.

எம்பி ஆன பிறகு முதல் பேச்சு:

கேரளாவின் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அரசியலமைப்பு தின விவாதத்திற்கு பிரியங்கா காந்தியின் பெயரை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தவுடன், ராகுல் காந்தி மேசையை தட்டி உற்சாகப்படுத்தினார். அப்போது பேசிய வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அச்சம் நிலவியது. இந்த பக்கம் அமர்ந்து காந்தியின் சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருந்தபோது, வேறு கருத்தியலை கொண்டவர்கள் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டனர். இன்றும் அவர்களின் நிலை அப்படியே ஆகிவிட்டது. விவாதத்திற்கு அஞ்சும் அளவுக்கு பயத்தை பரப்புவதற்கு அவர்கள் பழகிவிட்டனர்.

அந்த காலத்தில் குறைகளை கேட்க மன்னர் மாறுவேடத்தில் செல்வார். ஆனால், இன்றைய மன்னர்கள் மாறுவேடங்களை மட்டுமே மாற்றி கொள்கிறார்கள். ஆனால், பொதுமக்கள் மத்தியில் செல்லவோம், விமர்சனங்களை கேட்கவோ தைரியம் இல்லை. நான் நாடாளுமன்றத்திற்கு புதியவர், நான் வந்து 15 நாட்கள்தான் ஆகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு நாளைக்கு 10 நிமிடம் மட்டுமே பிரதமரை பார்க்க முடிகிறது.

இந்த நாடு பயத்தால் கட்டமைக்கப்படவில்லை, தைரியம் மற்றும் போராட்டத்தால் கட்டப்பட்டது. இந்த நாட்டை உருவாக்கியவர்கள் விவசாயிகள், ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள். அரசியல் சட்டம் இத்தகையவர்கள் தைரியத்தை அளிக்கும். வல்லமையுள்ளவர்களுக்காக விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இமாச்சலத்தில் ஆப்பிள் வியாபாரத்திலும், குளிர்பதன கிடங்கிலும் அதானிக்கு நுழைவு கொடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம்,சுரங்கங்கள், துறைமுகங்கள், சாலை, ரயில்வே பணிகள் என அனைத்தும் ஒருவருக்கே இங்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அதானியின் பக்கமே செல்கிறது. முன்பெல்லாம், அரசியலமைப்பு சட்டம் தங்களை காக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால், இப்போது அவர்களின் நம்பிக்கை தொலைந்துவிட்டது. இன்று அதானிக்காக மட்டுமே இந்த அரசு இயங்குகிறது என்ற கருத்து சாமானிய மக்களிடையே உருவாகி வருகிறது. இன்று பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஏழைகளின் வறுமை அதிகரித்து வருகிறது” என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு:

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, “ மத்திய அரசு பக்கவாட்டு நுழைவு மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்துகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை பாஜக பெற்றிருந்தால், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் வேலையை ஆரம்பித்திருப்பார்கள். இதற்கு பொதுமக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியது. இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒவ்வொருவரின் நிலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப கொள்கைகள் வகுக்க இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

இந்திய மக்களின் மனதில் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நான் கண்டுள்ளேன். அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டை கூட பாதுகாக்க முடியாது. சம்பாலிலும், மணிப்பூரிலும் பார்த்தேன். ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த எனது சகாக்கள் கடந்த 75 ஆண்டுகளை பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். இன்று நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் போராடும் மக்களுக்கு என்ன நிவாரணம் தந்தது.? இந்தியாவில் பேரிடர் ஏற்படும்போது நிவாரணம் கிடைப்பதில்லை. இன்று இந்த நாட்டின் விவசாயிகள் கடவுளை நம்புகிறார்கள். இந்தியாவில் எந்த சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை பெரும் தொழிலதிபர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன.

பாபா அம்பேத்கர், மௌலானா ஆசாத் ஜி, ஜவஹர்லால் நேரு ஜி மற்றும் அன்றைய தலைவர்கள் அனைவரும் இந்த அரசியலமைப்பை உருவாக்குவதில் பல ஆண்டுகளாக மும்முரமாக இருந்தனர். நமது அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் எரியும் நீதி, வெளிப்பாடு மற்றும் லட்சியத்தின் சுடர். ஒவ்வொரு இந்தியருக்கும் நீதியைப் பெற உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கும் அதிகாரத்தை அது வழங்கியது. உரிமைக்காகக் குரல் எழுப்பும் திறன் அவருக்கு உண்டு. அவர் குரல் எழுப்பினால், அவர் முன் அரசு தலைவணங்க வேண்டும். இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் மாற்றவும் உரிமையை வழங்கியது” என்று பேசினார்.

 

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!