Chhattisgarh: போலியாக செயல்பட்ட எஸ்பிஐ வங்கி.. லட்சக்கணக்கில் பணம் அபேஸ்!
சாபோரா என்ற கிராமத்தில் தான் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் போலியான கிளை கண்டறியப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அந்த வங்கியில் 6 பேர் ஊழியர்களாக எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி பணியாற்றி வந்துள்ளனர். உண்மையான வங்கி போல செயல்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு ஆரம்பத்தில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.
போலி எஸ்பிஐ வங்கி: சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்ட போலியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை உண்மை என நம்பி அப்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பு உள்ளிட்ட இன்னபிற விவரங்களுக்காக செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி என்ற மாவட்டம் உள்ளது. இங்கு சாபோரா என்ற கிராமத்தில் தான் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் போலியான கிளை கண்டறியப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அந்த வங்கியில் 6 பேர் ஊழியர்களாக எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி பணியாற்றி வந்துள்ளனர். உண்மையான வங்கி போல செயல்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு ஆரம்பத்தில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. வங்கியின் உள்ளே இருக்கும் அத்தனை வசதிகளும், ஆவணங்களும் இடம்பெற்றிருந்தது. அதேசமயம் தங்கள் கிராமத்தில் வங்கி ஆரம்பிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடனே கணக்கு தொடங்கி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ள்ள தொடங்கியுள்ளனர். தினமும் வங்கிக்கு செல்வதை அப்பகுதி மக்கள் வாடிக்கையாகவே கொண்டிருந்ததால் அங்கு பணியாற்றிய ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் சபோரா கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் அகர்வால் என்பவர் டப்ராவில் உள்ள எஸ்பிஐ வங்கியை தேவை ஒன்றுக்காக நாடியுள்ளார். அவர் வங்கிக்கு சென்று விண்ணப்பித்த ஒரே நாள் இரவில் திடீரென தனது கிராமத்தில் எஸ்பிஐ வங்கி கிளை தொடங்கியதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். ஆனாலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Also Read: Cinema Rewind: இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி டப்ரா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளரை சந்தித்து விவரத்தைச் சொல்லியுள்ளார். இப்படி ஒரு வங்கியை பற்றி கேள்விப்பட்டதும் மேலாளரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக தனது மேலதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணைக்கு வரும் வரை சாபோரா கிராமத்தில் நிலைமை சாதாரணமாக தான் இருந்துள்ளது.
அதிகாரிகளும் போலீசாரும் வந்த பிறகு தான் அது போலியாக செயல்பட்ட எஸ்பிஐ வங்கி கிளை என தெரிய வந்தது. அங்கு பணியாற்றிய ஆறு பேர் நியமனங்களும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக 4 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வங்கியில் வேலைக்கு சேர்ந்தவர்கள் அந்தப் பதவிக்காக ரூ. 2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கி வேலையை பெற்றுள்ளனர். சரியாக வேலையில்லாதவர்கள் குறி வைக்கப்பட்டு அவர்களிடம் மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலியான அந்த எஸ்பிஐ வங்கி சாபோரா கிராமத்தைச் சேர்ந்த தோஷ் சந்திரா என்பவருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. அதற்கான மாத வாடகையாக ரூ.7000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ராய்ப்பூரில் உள்ள கோர்பா, பலோட், கபீர்தாம் மற்றும் சக்தி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேலையில்லாத நபர்கள் குற்றவாளிகளின் முதன்மை இலக்குகளாக இருந்துள்ளனர். இங்கு ஊழியராக பணியாற்றிய ஜோதி யாதவ் என்பவர், “தான் ஆவணங்களை சமர்ப்பித்து வேலைக்கு தேர்ச்சி அடைந்தேன். என்னிடம் மாத சம்பளம் ரூபாய் 30 ஆயிரம் தருவதாக வாக்குறுதி அளித்தனர்” என கூறினார்.
Also Read: Vaigai Express: ரயிலின் படியில் அமர்ந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்
அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணான சங்கீதா கன்வர் என்பவர் பேசும் போது, “என்னிடம் இந்த வேலைக்காக ரூபாய் 5 லட்சம் கேட்டார்கள். ஆனால் என்னுடைய பொருளாதார சூழல் காரணமாக இறுதியாக ரூபாய் 2.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. எனக்கு மாதம் 30 முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் தருவதாக தெரிவிக்கப்பட்டது” என கூறினார். சாபோரா கிராமத்தில் வங்கி கிளை திறக்கப்பட்டது கிராமவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மேலும் வங்கி முழுமையாக செயல்பட தொடங்கியவுடன் கடன் வாங்குவது பற்றியெல்லாம் யோசித்துள்ளனர். அதே சமயம் போலி வங்கி என தெரியாமல் அது தொடர்ந்து செயல்பட்டிருந்தால் நிச்சயம் கோடிக்கணக்கில் மக்கள் ஏமாந்து போயிருப்பார்கள் என உள்ளூர் வாசிகள் நொந்து கொண்டனர்.
இந்த வங்கியில் சிலர் தங்கள் நகைகளையும் நில பத்திரங்களையும் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.