Narendra Modi : சொந்தமாக கார், வீடு இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
PM Modi Assets: தனக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு:
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையொட்டி, அவர் சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்ததாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர மோடி தெரிவித்துள்ளார். அரசியிடம் இருந்து பெறும் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகியவற்றை தனது வருவாய் ஆதாரமாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1.66 கோடிக்கு சொத்துகள் இருந்தன.
இது 2019ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாகவும், 2024ஆம் ஆண்டில் ரூ.3.02 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதில், அவரின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் முதலீடுகள் அடங்கும். தற்போது, பிரதமர் மோடியிடம் ரூ.2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் தேசிய சேமிப்புகள் பத்திரங்களில் அவர் ரூ.7.61 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். இது தற்போது ரூ.9.12 லட்சமாக உயர்ந்துள்ளது. அவரின் பெயரில் வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடி உள்ளது. அவருக்கு சொந்தமாக கார், வீடு, நிலம் பங்குகள் எதுவும் இல்லை. ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளார். மேலும், தேர்தல் பத்திரத்தில் தனது மனைவியின் பெயர் ஜஷோ தாபென் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை தவிர அவர் வேறு எந்த விவரங்களை குறிப்பிடவில்லை.
Also Read : கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம்
வேட்புமனு தாக்கலுக்கு பின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வரலாற்று சிறப்புமிக்க வாரணாசி தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த பெருமை. மக்களின் ஆசியால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மேலும் பணிகள் தொடரும். காசியில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடியது பெருமைமிக்க தருணம்” என்றார்.
3வது முறையாக வாரணாசியில் போட்டி:
வாரணாசியில் 7வது கட்ட தேர்தலின்போது (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றார். மொத்த பதிவான வாக்குகளில் இது 56 சதவீமாகும். 2019 தேர்தலில் 6.74 லட்சம் வாக்குகளை பெற்றார். மொத்த வாக்குகளில் இது 63 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்..14 பேர் உயிரிழப்பு..என்ன நடந்தது?