“எமர்ஜென்சி.. அரசியலமைப்பு மாற்றம்” காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
PM Modi: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசியலமைப்பு தின விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார். அதைத் தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி உறையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசியலமைப்பு தின விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார். அதைத் தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி உறையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதாவது, ”அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரம் இது. பாராளுமன்றமும் அதில் அங்கம் வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் அனைவருக்கும், அனைத்து குடிமக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்.
காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இந்திய ஜனநாயகம் உலகிற்கு உத்வேகம் அளித்துள்ளது, அதனால் தான் இந்தியா ஜனநாயகத்தின் தாயாக உள்ளது. நமது அரசியல் நிர்ணய சபையில் 15 பெண்கள் இருந்தனர். இது எங்களுக்கு பெருமையான விஷயம். பல நாடுகள் ஜனநாயக நாடாக மாறினாலும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை.
ஆனால் இந்தியா ஆரம்பத்திலிருந்தே அவற்றைக் கொடுத்தது. அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் பெண்களே முதன்மையாக இருப்பதை நாம் பார்க்கிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு, ஒற்றுமையின் அடிப்படை மதிப்புகள் தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சிலர் விஷத்தை விதைக்கத் தொடங்கினர்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவரைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது. பெண்கள் ஒவ்வொரு துறையிலும் பங்கு கொள்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு பெருமைக்குரியது. ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறார்கள்.
Also Read : “சாவர்க்கரை அவமதிக்கிறீங்க” பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி!
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை உணர்ந்து, அதை அறிந்திருந்தனர். 370வது சட்டப்பிரிவு இந்தியாவின் ஒற்றுமைக்கு தடையாக இருந்தது. அதை அகற்றுவதே எங்கள் முன்னுரிமை. ஒற்றுமையே எங்களின் முன்னுரிமையாக இருந்தது” என்றார்.
”75 முறை அரசியலமைப்பை திருத்தியது காங்கிரஸ்”
தொடர்ந்து பேசிய அவர், ”1948 இல் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து இந்தியாவின் பயணம் அசாதாரணமானது. நாடு ஜனநாயகத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு நமது அரசியலமைப்புச் சட்டம் தான் அடித்தளம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அடித்தளத்தை உருவாக்கியவர்கள்.
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர் ஜவஹர்லால் நேரு 1951 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தினார் என்றும், அவரது மகள் இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது தனது திருத்தங்கள் மற்றும் எமர்ஜென்சியை அமல்படுத்தியதன் மூலம் இதை முன்னெடுத்துச் சென்றார். காங்கிரஸ், ஆறு தசாப்தங்களில் 75 முறை அரசியலமைப்பை திருத்தியது.
இந்தியா தனது அரசியலமைப்பின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, நமது நாட்டின் அரசியலமைப்பு துண்டாடப்பட்டது. எமர்ஜென்சி விதிக்கப்பட்டது, அரசியலமைப்பு விதிகள் இடைநிறுத்தப்பட்டன, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது, குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் குறைக்கப்பட்டது” என்றார் பிரதமர் மோடி.
Also Read : அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர கண்காணிப்பு
“பாவத்தை காங்கிரஸால் துடைக்க முடியாது”
மேலும், “இந்த பாவத்தை காங்கிரஸால் துடைக்க முடியாது. நேரு-காந்தி குடும்பம் அரசியல் சாசனத்தை அலட்சியம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான விதையை ஜவஹர்லால் நேரு விதைத்தார். நேரு விதைத்த விஷ விதைக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இந்திரா காந்தி. 1976ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றியவர் இந்திரா காந்தி.
நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து இந்திரா காந்தி பதவியை பறித்தபோது அவர் எமெர்ஜென்சியை கொண்டு வந்தார். இந்திரா காந்தி தனது நாற்காலியைக் காப்பாற்ற அரசியல் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஆத்திரத்தில் எமர்ஜென்சியை விதித்தார். இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் அரசையும் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
பண்டிட் நேரு முதல் ராஜீவ் காந்தி வரை காங்கிரஸ் பிரதமர்கள் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தனர். இதற்கு வரலாறு சாட்சி. பண்டித நேரு அவர்களே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீண்ட கடிதங்கள் எழுதியிருந்தார். சபையில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீண்ட உரைகளை நிகழ்த்தினார்” என்றார்.