பெரிய ட்விஸ்ட்! ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நிறுத்தமா? அப்போ பிரியங்கா?
பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கிறது.
பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை?
இப்படியான நிலையில், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இந்த முறை கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
அங்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. எனவே, உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் நீண்ட காலமாக காங்கிரஸின் கோட்டையாக இருந்தன.
ஆனால், கடந்த முறை நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி ரானியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் கள நிலவரத்தை அறிந்து முன்னெச்சரிக்கையாக கேரளத்தில் வயநாடு தொகுதியிலும் நின்று வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதியில் அவரது தாய் சோனியா காந்தி தொடர்ச்சியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், இந்த முறை வயது முதுமை காரணமாக தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, ரேபரேலி தொகுதியில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பலமான வேட்பாளர்களை நிறுத்தினால் தான் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
ரேபரேலி, அமேதியில் யார்?
காரணம் உத்தர பிரதேசம் மாநிலம் பாஜகவின் கோட்டையாக இருக்கும் பட்சத்தில், அங்கு பலமான வேட்பாளர்களை நிறுத்துவது காங்கிரஸ்க்கு சாதகமாக இருக்கும். ஆகவே, அமேதியில் ராகுலும், ரேபரேலியில் அவரது தங்கை பிரியங்காவும் நிறுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்தன.
இப்படியான சூழலில் தான், பிரியங்கா காந்தி இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில் அமேதி தொகுதியில் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஷீலாகவுலின் பேரனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதி தொகுதி காந்தி-நேரு குடும்பத்தின் கோட்டையாக இருந்தது. குறிப்பாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.