வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா.. ரேபரேலி எம்பியாக தொடரும் ராகுல் காந்தி!
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, "ரேபரேலி மற்றும் வயநாடுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களிடம் இருந்து பெற்ற அன்புக்கு நன்றி. பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவார். ஆனால் நானும் அடிக்கடி வயநாட்டிற்கு செல்வேன். வயநாடு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
ரேபரேலி எம்பியாக தொடரும் ராகுல் காந்தி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றினார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் 3.90 லட்ச வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலைப்பின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பியாக இருக்க முடியாது. எனவே, எதாவது ஒரு தொகுதியில் எம்.பி.பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எந்த தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது பல நாட்களாக கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“வயநாடு மக்களின் அன்புக்கு நன்றி”
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, “ரேபரேலி மற்றும் வயநாடுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களிடம் இருந்து பெற்ற அன்புக்கு நன்றி.
பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவார். ஆனால் நானும் அடிக்கடி வயநாட்டிற்கு செல்வேன். வயநாடு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அது கடினமான முடிவு. வயநாடு மக்கள் என்னுடன் நின்று எனக்கு ஆதரவளித்தனர். அவர்களின் கடினமான நேரத்தில் நான் போராடுவேன்.
வயநாட்டு மக்கள் தங்களுக்கு 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக நினைக்கலாம். ஒருவர் எனது சகோதரி, மற்றவர் நான். என் கதவுகள் வயநாட்டு மக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். ராகுல் இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டோம்” என்றார்.
Also Read: நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து.. 15 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவிப்பு!
ரேபரேலியை ராகுல் தேர்வு செய்தது ஏன்?
2019 தேர்தலில் நாடு முழுக்க காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோதும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதி தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றியது. அந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் தான் வயநாடு தொகுதிதான் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. எனவே தான் 2வது முறையாக வயநாட்டில் களமிறங்கினார். அதேபோல, இந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு விருப்பமில்லை என்றாலும், சோனியா காந்தி, கார்கே ஆகியோரிடம் அறிவுறுத்தலின்பேரில் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இதனால் ரேபரேலி தொகுதி காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதோடு, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி தொடங்கி தாய் சோனியா காந்தி வரை நேரு குடும்பத்தினர் பாரம்பரியாக போட்டியிடும் தொகுதியாக ரேபரேலி உள்ளது. பெரோஸ் காந்தி இரண்டு முறையும், இந்திரா காந்தி மூன்று முறையும், சோனியா காந்தி ஐந்து முறையும் வெற்றி பெற்றனர். இப்படி அரசியில் முக்கியத்துவம் காரணமாக ரேபரேலி தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி தக்க வைத்துள்ளார்.
Also Read: மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம்.. சிக்னல் கோளாறா? மனித தவறா? பரபர தகவல்!