5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு.. குவியும் ஐயப்ப பக்தர்கள்!

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படும் ஐயப்பனை காண மாலை அணிந்து, விரதம் இருப்பதோடு  மட்டுமல்லாமல் நெய் தேங்காய் அடைக்கப்பட்ட இருமுடிப்பையையும் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இப்படிப்பட்ட சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Sabarimala:  மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு.. குவியும் ஐயப்ப பக்தர்கள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Nov 2024 06:53 AM

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சீசன் காலம் என சொல்லப்படும் கார்த்திகை, மார்கழி மாதம் நாளை முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படும் ஐயப்பனை காண மாலை அணிந்து, விரதம் இருப்பதோடு  மட்டுமல்லாமல் நெய் தேங்காய் அடைக்கப்பட்ட இருமுடிப்பையையும் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இப்படிப்பட்ட சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

தினசரி நிகழ்வுகள் 

அந்த வகையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கண்டரு ராஜூவரு, பிரம்மதத்தன் ஆகிய தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தியான மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டி பூஜை நடத்துவார். இதனைத் தொடர்ந்து 18 ஆம் படிக்கு கீழே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு, சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல் சாந்திகளாக அருண்குமார் நம்பூதிரி மற்றும் வாசுதேவன் நம்பூதிரி அங்கே இருவரும் மூல மந்திரம் சொல்லி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்படி தந்திரி கண்டரு ராஜூவரு , பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல் சாந்தியான அருண்குமார் நம்பூதிரி தலைமையில் நிர்மால்ய தரிசனமும்,  கணபதி ஹோமம் மற்றும் அதனை தொடர்ந்து காலை  11:30 மணிக்கு நெய் அபிஷேகமும் நடைபெறும். பின்னர் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Also Read: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

இதனை தொடர்ந்து திரும்பவும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும் என்றும்,  இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் அத்தாள பூஜை நடத்தப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதம் இந்த  தினசரி பூஜை முறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்

சபரிமலையில் நடை இன்று திறக்கப்படும் நிலையில் மதியம் 1 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளார்கள்.  கடந்த சில ஆண்டுகளாகவே சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் முன்பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதிகளில் சாமி தரிசனம் வர முடியாதவர்கள் வேறு தேதிக்கு மாற்றும் முன் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் முன்பதிவு செய்த நேரத்தில் வராத பக்தர்களின் இடங்கள் எல்லாம் ஸ்பாட் புக்கிங் செய்பவர்களுக்கு மாற்றி விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் சரியான நேரத்தில் வந்து சாமி தரிசனம் செய்து உடனடியாக கீழே இறங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு சீசனையொட்டி மரக்கூட்டம் முதல் வலிய நடைப்பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பம்பை முதல் சன்னிதானம் வரை 8 இடங்களில் 16 ஆயிரம்  பக்தர்கள் ஓய்வெடுக்க நிரந்தர பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 2,600 கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் தமிழக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ஊர் திரும்ப ஏதுவாக பேருந்துகள் பம்பையில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நிலக்கலில் போய் ஏற வேண்டிய சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News